அரசு பல் மருத்துவமனை சார்பில் வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவமனை சார்பில் வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் நேற்று உலக வாய் சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பிரேம்குமார் தலைமை வகித்தார். இதையொட்டி, பெரிய திரை அமைத்து சிகிச்சைக்காக வந்த மக்களுக்கு வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, எவ்வாறு பல் துலக்க வேண்டும், வாயை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தகவல்களுடன் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பேஸ்ட் மற்றும் பிரஷ் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்காக, பேராசிரியர்கள் ஜெய மற்றும் புவனேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் போது மருத்துவர்கள் கூறியதாவது: சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் தொடர்பாக அனைத்து பாதிப்புக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 1500 மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக பல் சுத்தம் செய்தல், ஈறு சம்பந்தமான சிகிச்சை, பல் கட்டுதல், பல் சீரமைப்பது, புற்றுநோய்க்கான சிகிச்சை, கட்டி அகற்றுவது, முகவாய் சீர் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. குறிப்பாக முகவாய் சீர் அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் இங்கு மட்டும் தான் செய்யப்படுகிறது. இதற்கு வெளியில் பல லட்சம் செலவு ஆகும். ஆனால் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அரசு பல் மருத்துவமனை சார்பில் வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: