மாநகராட்சி இடங்களில் புட் கோர்ட் 70 பூங்காக்களில் ரூ.2 கோடியில் புத்தகம் வாசிப்பு மண்டலங்கள்:  டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி  மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20: சென்னையில் 70 பூங்காக்களில் 2 கோடி ரூபாய் செலவில் புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக க்யூஆர் குறியீடு வசதி ஏற்படுத்தப்படும். இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் சேவைத் துறைகளான சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்கள் ஆகிய இடங்களில் எளிதாக வரி செலுத்துவதற்கு ஏதுவாக க்யூஆர் குறியீடு அச்சிட்ட அட்டைகள் பொருத்தப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வாடகைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளின் ஒவ்வொரு வாடகைதாரருக்கும் தனித்தனியாக வாடகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கு ஏதுவாக கியூஆர் குறியீடு அச்சிட்ட அட்டைகள் அந்தந்த கடைகளில் பொருத்தப்படும். இதனைப் பயன்படுத்தி வாடகைதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக உரிய வாடகையை நேரடியாக காலதாமதமின்றி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான சூழ்நிலை கொண்ட உணவு விற்பனை மண்டலங்கள் (Food Court) ஏற்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக வரும் நிதி ஆண்டில் இரண்டு இடங்களில் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியில், 200 புதிய பேருந்து நிழற்குடைகள் சுமார் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்படும். ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை தரம் உயர்த்தி இழுவிசை கூரையாக மேம்படுத்திட ரூ.4.47 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மணலி, ஐஓசிஎல், டோல்கேட் மற்றும் சாலிகிராமம் ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக விளையாட்டுத்திடல்களை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். எனவே பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 150 விளையாட்டுத் திடல்களில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும்.

பெரிய அளிவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 171 எண்ணிக்கையிலான விளையாட்டு திடல்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூங்காக்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பூங்காவின் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சாலை மைய தடுப்புகள் மற்றும் சாலை மைய தீவுத் திட்டுகளை அழகுபடுத்த, முதற்கட்டமாக 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் உரம் இடுதல் மற்றும் பல்வேறு வகையான அலங்காரப் பூச்செடிகள் நடவு செய்து அதனை பாதுகாக்கும் வகையில், துரு பிடிக்காத இரும்பிலான கைப்பிடி அமைக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

300 பூங்காக்களை பொது மக்கள் அதிகம் பயன்படுத்திடும் வகையில், பூங்காக்கள் பழுது பார்க்கும் பணிகளுக்காகவும் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காகவும் ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 10 பெரிய பூங்காக்களை தேர்வு செய்து அனைத்து வகையான பார்வையாளர்களும், முக்கியமாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான தகவல் தொடர்புகளை உருவாக்கிட, ரூ.4.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாளிகையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய வீடியோ வால் (Video Wall) திரை அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும். குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பையை உடனுக்குடன் அகற்றுவதை கண்காணித்திட கூடுதலாக 400 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதற்கென ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும். வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்துவதற்கும், இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் புதிய பணிகள் குறித்து உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்வதற்கு அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50லட்சத்திலிருந்து ரூ.60லட்சமாக உயர்த்தப்படும். 2025-26ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் காலநிலை முதலீடுகள் குறித்த அறிக்கை, சென்னை மாநகராட்சியால் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேம்பாலங்களில் கீழ் பகுதியை அழகுபடுத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு
மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை உகந்த முறையில் அழகுபடுத்திட ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மின்னாக்கி ரூபாய் 4.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். வாகனப் போக்குவரத்து சுரங்கப்பாதைகளில், மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு, புதிய டீசல் மோட்டார்கள், மின்மோட்டார்கள், மின்னாக்கி அமைக்கப்படும். மேலும், சுரங்கப்பாதைகளில் வர்ணங்கள் பூசப்பட்டு வண்ணமிகு வரைபடங்கள் வரைந்து மின் விளக்குகளால் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ.14.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

62 அறிவிப்புகள்
கல்வி துறையில் 16, பொது சுகாதாரம் 15, இயந்திர பொறியியல் துறை 2, வருவாய் துறை 4, பேருந்து சாலைகள் 3, பூங்கா 9, தகவல் தொழில்நுட்ப துறை 6, மேலாண்மை 2, கட்டிடம் 1, மன்றம் 2 ஆகிய துறைகளில் மொத்தம் 62 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

The post மாநகராட்சி இடங்களில் புட் கோர்ட் 70 பூங்காக்களில் ரூ.2 கோடியில் புத்தகம் வாசிப்பு மண்டலங்கள்:  டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி  மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: