தமிழ் மொழி சிறப்பை வெளிமாநிலத்தவர் அறிய தமிழ் வளர்ச்சி சபை உருவாக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மயிலை த.வேலு பேச்சு

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு (திமுக) பேசியதாவது: முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். இந்திக்கும் நாம் எதிரி அல்ல, இந்தி பேசும் மக்களுக்கும் நாம் எதிரி அல்ல. சில அரசியல் தலைவர்கள் உள்பட வெளி மாநில நடிகர்கள் கூட நாம் ஏதோ இந்திக்கும், அதைப் பேசும் மக்களுக்கும் எதிரி போன்ற ஒரு மாயையை உருவாக்கிப் பேசி வருகிறார்கள். அது மிகவும் தவறு. தமிழர்களைப் போல், தமிழ்நாட்டைப் போல், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் பேணும் மாநிலம் வேறு எங்கும் இல்லை. அதற்கு உதாரணம் தான் தென் இந்திய இந்தி பிரசார சபா. அது தி.நகரில் 1912ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. ஒரு ஆண்டில் இந்தி படிக்க விருப்பமுள்ள 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். யாரும் அவர்களை தடுப்பதும் இல்லை, விமர்சனம் செய்வதும் இல்லை.

எப்படி பிரெஞ்ச் மொழி, ஜப்பான் மொழி கற்று வருகிறார்களோ, ரஷ்ய கலாச்சார மையம் மூலம் ரஷ்ய மொழி கற்று வருகிறார்களோ, அதேபோல் தமிழகத்தில் விருப்பப்பட்டு எந்த மொழியையும் கற்கலாம். அதை யாரும் தடுப்பது இல்லை, அதற்கான வாய்ப்பு இங்கே கிடைக்கிறது. வடநாட்டிலுள்ள சில அறிவு ஜீவிகளுக்கு அது புரிவது இல்லை. எப்படி இந்தி மொழியைப் பரப்ப இந்தி பிரசார சபை உருவாக்கப்பட்டதோ, அதேபோன்று தமிழ் மொழியை, அதன் சிறப்பை வெளிமாநில மக்கள் தெரிந்துகொள்ள, ஆர்வமாக விருப்பமுள்ளவர்கள் படிக்க ஏதுவாக, ஒரு தமிழ் வளர்ச்சி சபை உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, போபால் மற்றும் நாக்பூரிலும் தமிழ் வளர்ச்சி சபை உருவாக்கப்பட்டு அடிப்படைத் தமிழ், நடுநிலைத் தமிழ், முதுநிலைத் தமிழ் என்று அண்டை மாநில மக்களுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுக்க முயற்சிகளை எடுக்கலாம். இதன்மூலம், தமிழ் மொழியையும், பெருமையையும், வரலாற்றுச் சிறப்பையும், பண்பாட்டையும், வீரத்தையும் தமிழ் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு நாம் எடுத்துச் செல்ல முடியும். மேலும், மெரினா லூப் சாலை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் வரையில் அதிக மீனவ மக்கள் மற்றும் இதர சமூகத்தினர் வாழும் பகுதிகளான கடற்கரை ஓரமுள்ள மிகவும் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு வீடு கட்டும் பணியை துரிதமாக தொடங்க வேண்டும்.

அந்த சாலையில் முன்னேடுக்கும் வளர்ச்சி பணிகள் காரணமாக பெரும்பான்மையாக கடலை நம்பி வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உறுதி செய்திட வேண்டும். மெட்ரோ ரயில் பணி காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலை ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டது. தற்போது அந்த பகுதியில் மெட்ரோ பணிகள் முடிவடைந்ததால், அந்தச் சாலை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். மேலும், மயிலை கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயில் வருமானம் பெருகிடவும், காலியாக பயன்பாடற்று கிடக்கும் அறநிலையத் துறைக்கு சொந்தமான வெங்கடேச அக்கரஹாரம் தெருவில் அமைந்துள்ள மிகவும் பாழடைந்த வணிக வளாகம் மற்றும் அதையொட்டியுள்ள பயன்படுத்தாத இடத்தையும் சேர்த்து இடித்துவிட்டு, புதிய வணிக வளாகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ் மொழி சிறப்பை வெளிமாநிலத்தவர் அறிய தமிழ் வளர்ச்சி சபை உருவாக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மயிலை த.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: