விளையாடிய சிறுவனுக்கு எலும்பு முறிவு பொழுதுபோக்கு மையம் மீது போலீசில் பெற்றோர் புகார்

 

துரைப்பாக்கம், மார்ச் 15: திருநின்றவூர், நேரு நகரை சேர்ந்தவர் பாரூக் (35). இவர், தனது மனைவி, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 11 பேருடன், கடந்த 2ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, அவரது மகன் முஹம்மது அர்ஷத் (6), ட்ரம் போலின் என்கிற விளையாட்டில் குதித்து விளையாடியபோது, தவறி கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பாரூக், படுகாயமடைந்த தனது மகனை மீட்பதற்காக உதவி செய்யுமாறு, விளையாட்டு அரங்கத்தில் இருந்த ஊழியர்களை அழைத்தபோது, யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், படுகாயமடைந்த தனது மகனை மீட்டு, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பாரூக், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பொழுதுபோக்கு மையத்தின் அலட்சியத்தால் எனது மகனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவ செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வரும் பிரபல பொழுதுபோக்கு மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விளையாடிய சிறுவனுக்கு எலும்பு முறிவு பொழுதுபோக்கு மையம் மீது போலீசில் பெற்றோர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: