பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி தொழிலாளி மகள்கள் 3 பேரை சொகுசு காரில் கடத்த முயற்சி: இணையதளத்தில் அறிமுகமான தம்பதி கைது

குளித்தலை: பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி தொழிலாளியின் 3 மகள்களை காரில் கடத்தி செல்ல முயன்றதாக தம்பதி கரூரில் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினகிரி. இவரது மனைவி கார்த்திகை செல்வி (45). இவர்களுக்கு பிரியங்கா (27), பிரியதர்ஷினி (25), பிரித்திகா (23) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வனச்சரகத்தில் வனவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேச்சுரல் லிஸ்ட் வெப்சைட் மூலமாக பெங்களூரை சேர்ந்த கார்த்திக் (41) என்பவருடன் பிரியங்காவுக்கு ஏற்பட்ட பழக்கத்தில், கடந்த 11ம்தேதி கார்த்திக், அவரது மனைவி கிரிஷ்மாவுடன் (39) காரில் குளித்தலை வந்துள்ளார். பின்னர் பிரியங்கா வீட்டிற்கு சென்றார். பெங்களூரில் உள்ள ஒகனா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக கார்த்திகை செல்வியிடம் தெரிவித்த கார்த்திக், உங்களது மகள்கள் 3 பேரை வேலைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதற்கு இவர்களது பெற்றோர் சம்மதிக்கவில்லை.

அப்போது கார்த்திக், உங்களது மகள்கள் 3 பேரும் வேலைக்கு வருவதற்கு ஏற்கனவே ஒத்துக்கொண்டுள்ளனர். நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கூறி தகாத வார்த்தையால் அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகைசெல்வி, குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு, பின்னர் காவல் நிலையத்திற்கு தம்பதியை அழைத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகை செல்வி கொடுத்த புகாரில், பெங்களூரில் உள்ள ஒகனா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக கூறிய கார்த்திக், பெங்களூரில் 3 மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதற்கு மறுத்ததால் பிஎம்டபிள்யூ காரில் 3 மகள்களை கடத்த முயன்றார் என குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பெங்களூரில் உள்ள ஒகனா பள்ளியில் கார்த்திக் ஆசிரியராக பணிபுரியவில்லை என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், அவரது மனைவி கிரிஷ்மா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து பிஎம்டபிள்யூ காரை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கார்த்திக் குளித்தலை கிளை சிறையிலும், கிரிஷ்மா திருச்சி மத்திய மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

The post பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி தொழிலாளி மகள்கள் 3 பேரை சொகுசு காரில் கடத்த முயற்சி: இணையதளத்தில் அறிமுகமான தம்பதி கைது appeared first on Dinakaran.

Related Stories: