வழக்கம் போல் நேற்று முன்தினம இரவு சக ரவுடியான சுரேஷ் (எ) படப்பை சுரேஷ் (26) என்பவருடன் மது அருந்திவிட்டு, இருவரும் கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் படுத்திருந்தனர். அப்போது, 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், கோயிலில் படுத்திருந்த ரவுடி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். அப்போது, ரவுடி அருண் அலறியபடி அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார்.
ஆனால் விடாமல் விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது, ரவுடி கும்பல் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவத்தில் ரவுடி சுரேஷ் தலை சிதைந்த நிலையில் உயிரிழந்தார். அருண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் போராடி கொண்டிருந்தார். தகவலறிந்த கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து, ரவுடி அருணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அருணை சோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அருண் மற்றும் சுரேஷ் ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரட்ைட கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரம் சித்ரா நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், கோட்டூர்புரம் சித்ரா நகர் வி பிளாக் பகுதியை சேர்ந்த சுரேஷ் (எ) சுக்கு காபி சுரேஷ் (25) என்பவர், தனது கூட்டாளிகள் 7 பேருடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட ரவுடி அருண் மற்றும் சுக்கு காபி சுரேஷ் ஆகியோர் கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்தவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தவர்கள். இருவரும் சேர்ந்து பல குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். சுரேஷ் (எ) சுக்கு காபி சுரேஷ், கேளம்பாக்கத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான இளம்பெண் சாயின்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரது காதலுக்கு ரவுடி அருண் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் ரவுடி அருண் தனது நண்பரான சுக்கு காபி சுரேஷின் காதலியுடன் நெருங்கி பழங்கி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சுக்கு காபி சுரேஷை விட்டு ரவுடி அருணை காதலிக்க தொடங்கியுள்ளார். பிறகு ஷாயின்ஷா ரவுடி அருணுடன் பல இடங்களுக்கு சென்று தனிமையில் சுற்றி வந்துள்ளார். இது ரவுடி சுக்கு காபி சுரேசுக்கு பிடிக்கவில்லை. பலமுறை சாயின்ஷாவை கண்டித்தும் அவர் ரவுடி அருணுடனான பழக்கத்தை கைவிடவில்லை.ஒரு கட்டத்தில் ஆத்திமடைந்த ரவுடி சுக்கு காபி சுரேஷ், ஷாயின்ஷாவின் 2வது காதலன் துணையுடன் கடந்த 2022ம் ஆண்டு சாயின்ஷாவை கேளம்பாக்கத்தில் வைத்து படுகொலை செய்தார்.இந்த கொலை வழக்கில் கேளம்பாக்கம் போலீசார் சுக்கு காபி சுரேஷை கைது செய்தனர்.
பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர், தன்னை ரவுடி அருண் கொலை செய்துவிடுவான் என்ற அச்சத்தில் தனது வீட்டிற்கு வராமல் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலேயே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்துள்ளார். அருண் கேளம்பாக்கத்தில் தனது காதலியுடன் தனிமையில் இருந்த போது, பாம்பு ஒன்று அருணை கடித்துள்ளது. உடனே தனது காதலனை காப்பாற்றும் நோக்கில் ஷாயின்ஷா, அந்த பாம்பை அடித்து கொன்று மருத்துவமனைக்கு பாம்புடன் தனது காதலன் அருணை அனுமதித்தார்.
தனது உயிரை காப்பாற்றிய ஷாயின்ஷாவை கொன்ற சுக்கு காபி சுரேஷை படுகொலை செய்ய ரவுடி அருண் தனது சகோதரன் அர்ஜூன் உதவியுடன் பல முறை முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக தனது நண்பரான ரவுடி படப்பை சுரேஷ் உதவியையும் அருண் நாடியுள்ளார். அதற்கு படப்பை சுரேஷ் உதவி செய்வதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரவுடி அருண் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது ரவுடி சுக்கு காபி சுரேஷ் கவனத்திற்கு சென்றது.
இதனால் அச்சமடைந்த ரவுடி சுக்கு காபி சுரேஷ், தன்னை படுகொலை செய்வதற்குள் ரவுடி அருணை படுகொலை செய்யதால் தான் நாம் உயிர் பிழைக்க முடியும் என்று முடிவு செய்தார். இதற்காக அவர் தனது ஆட்கள் மூலம் நேற்று முன்தினம் காலை முதல் ரவுடி அருணை பின் தொடர செய்து, உடனுக்குடன் தகவல் பெற்றுள்ளார். ரவுடி அருண் தனது நண்பர் படப்பை சுரேஷ் உடன் மது அருந்திவிட்டு கோயிலில் படுத்து இருப்பதாக நண்பர்கள் அளித்த தகவலின் படி, தனது நண்பர்களான 7 பேர் உடன் வந்து ரவுடி அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தனர். இதனிடையே, குற்றவாளிகள் 8 பேரை பிடிக்க கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படைகள் செல்போன் சிக்னல் மற்றும் வாகன பதிவு எண்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
The post காதலியை கொன்றதற்கு தன்னை பழிதீர்ப்பான் என்ற அச்சத்தில் கோயிலுக்குள் புகுந்து 2 ரவுடிகள் கொலை: தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் தலைமையில் 3 தனிப்படை appeared first on Dinakaran.