வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்: 37 கிராம் நகை, பைக் பறிமுதல்

பூந்தமல்லி : மதுரவாயல் அடுத்த வானகரம் போரூர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி (43). இவர் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் இசக்கியை வழிமறித்து, கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.1000 மற்றும் ஒரு செல்போனை பறித்தனர்.

அப்போது அவர் கூச்சல் போட்டதால், வாலிபர்கள் இருவரும் கற்கள் மற்றும் கூல் டிரிங்க்ஸ் பாட்டிலால் இசக்கியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து இசக்கி மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆவடி அடுத்த மோரை என்ற பகுதியைச் சேர்ந்த அஜய் (22) மற்றும் வெள்ளைச்சேரி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் மதுரவாயல் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 37 கிராம் தங்க நகைகள், ரூ.1000, ஒரு செல்போன், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவர் மீதும் தேனாம்பேட்டை மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் செயின் பறிப்பு, கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்: 37 கிராம் நகை, பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: