ஊட்டி, மார்ச் 13: மேட்டுப்பாளையம் முதல் மைசூர் செல்லும் சாலையில் கக்கநல்லா சோதனை சாவடி வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு சாலை உள்ளது. இச்சாலையில், பெரும்பாலான பகுதிகளில் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஊட்டியில் தலைகுந்தா முதல் சேரிங்கிராஸ் வரையிலும் சாலை பழுதடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபால், ஊட்டி – கூடலூர் சாலையில் எச்பிஎப்., பகுதி முதல் தலைகுந்தா வரை சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. மேலும், தவளை மலை முதல் ஊசிமலை வரையில் சாலை பழுதடைந்துள்ளது. ஊசி மலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதிகளில் வாகனங்கள் செல்லும் போது கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் இந்த பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்கும் போது பழுதடைகிறது. இது மட்டுமின்றி, இச்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்கள் உள்ளது தெரியாமல் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேட்டுப்பாளையம் – கூடலூர் சாலையில், ஊட்டி முதல் குன்னூர் வரையில் பழுதடைந்த சாலை, சேரிங்கிராஸ் முதல் தலையாட்டு மந்து, எச்பிஎப்., முதல் தலைகுந்தா மற்றும் ஊசிமலை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடி சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post ஊட்டி – கூடலூர் சாலையில் தலைகுந்தா, ஊசிமலை பகுதிகளில் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.