குன்னூர், மார்ச் 14 : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதியை கடந்து, தினம் தோறும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் மஞ்சூர், கொலகொம்பை, அதிகரட்டி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக குன்னூர் முதல் மஞ்சூர் வரை சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த சாலையின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணிகள் முடிவடைந்து, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு ஏதுவாக திறக்கப்பட்டது. இந்நிலையில் கொலக்கொம்பை மற்றும் மஞ்சூர் சாலையை இணைக்கும் சேலாஸ் சுங்கம் பகுதியில் குறுகலான வளைவு இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல்களும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறை சார்பாக அந்த சாலையை விரிவுபடுத்தும் பணிகளுக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் தற்போது பொக்லைன் இயந்திரம் மூலமாக அந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரிரு நாட்களில் இந்த பணிகள் முடிப்பதற்கும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
The post குன்னூர் அருகே சேலாஸ் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.