ஷொர்ணூர், பட்டாம்பியில் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கிய வட மாநில வாலிபர்கள்

பாலக்காடு, மார்ச் 12: ஷொர்ணூர், பட்டாம்பி ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தியதில் 2 வடமாநில வாலிபர்கள் கஞ்சா பொட்டலங்களுடன் பிடிபட்டனர். பாலக்காடு மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ஷொர்ணூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை நடத்தினர். அப்போது 4-வது நடைமேடையில் சந்தேகப்படும்படியாக வடமாநில சேர்ந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரிடம் கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஷொர்ணூர் டி.எஸ்.பி., மனோஜ்குமார், போதை தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., அப்துல் முனீர் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் ரஜாக் (31) என தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ராஜேஷ் ரஜாக்கை கைது செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, பட்டாம்பி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் உடமைகளை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது மேற்கு வங்கம் முஷிரிபாத்தை சேர்ந்த ஷிபருதீன் மலிதாவின் மகன் ராபுல் மலிதா (29) என்பவரிடம் கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பிடித்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post ஷொர்ணூர், பட்டாம்பியில் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கிய வட மாநில வாலிபர்கள் appeared first on Dinakaran.

Related Stories: