ஊட்டி, மார்ச் 6: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி ஆச்சகரை பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக மசினகுடி ஊராட்சியிலுள்ள பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாதி சான்றிதழ்கள் குறித்தும், அவர்களின் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு செல்கின்றனரா என்பது குறித்தும் பழங்குடியினர் மக்களிடம் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாதிரி கிராம விருது திட்டத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை குப்பை பிரிக்கும் கிடங்கின் கட்டுமான பணியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள நூலக கட்டிடத்தினையும் பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் எண்ணிக்கை குறித்தும் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
சிங்காரா இறுதி நிலை நீர் மின் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி திறன் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறிந்தார். முன்னதாக வாழைத்தோட்டம் ஜிஆர்ஜி., நினைவு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலெக்டர் கலந்துரையாடினார். வாழ்க்கையில் வெற்றி பெற தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும். நல்ல நல்ல புத்தகங்களை தேடி படிக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு படித்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், பைக்காரா இறுதி நிலை நீர்மின் நிலைய உதவி செயற்பொறியாளர்கள் பாலாஜி, வேல்ராஜ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தரன், சலீம், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post ஆச்சக்கரை பழங்குடியின கிராமத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.