எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்தது போர்த்தியாடா பகுதி விவசாயிகள் பாதிப்பு

 

ஊட்டி, மார்ச் 5: ஊட்டி அருகே எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்த நிலையில் போர்த்தியாடா, இத்தலார் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், எமரால்டு அணையும் ஒன்று. இந்த அணை நீர் கொண்டு குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நீர் எமரால்டில் இருந்த போர்த்தியாடா வரை சுமார் 10 கி.மீ தூரம் பறந்து விரிந்து காணப்படும்.

இந்த அணை நீரை கொண்டு போர்த்தியாடா, இத்தலார் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, மின் உற்பத்தி அதிகரிக்கும் சமயங்களில் இந்த அணையில் தண்ணீர் குறைந்து காணப்படும். காட்டுக்குப்பை மின் நிலையம் கட்டுமான பணிகள் மற்றும் நீரேற்று மையங்கள் கட்டுமான பணிகள் நடப்பதால், இரு மாதங்களுக்கு முன்னரே இந்த அணையில் இருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால், அணையில் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. தற்போது அணையின் தண்ணீர் அளவு குறைந்த நிலையில், போர்த்தியாடா பகுதியில் அணை காய்ந்து போய் காட்சியளிக்கிறது. மேலும், சிறிய கால்வாயில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. அணையில் தண்ணீர் இல்லாத நிலையிலும், மழையும் பெய்யாத நிலையில், இந்த அணையின் கரையோரங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி கோடை மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

The post எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்தது போர்த்தியாடா பகுதி விவசாயிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: