3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்று சாதனை; கோப்பையை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அர்ப்பணிக்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

துபாய்: 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன் எடுத்தது. டேரில் மிட்செல் 63, மைக்கேல் பிரேஸ்வெல் 53 , ரச்சின் ரவீந்திரா 37, பிலிப்ஸ் 34 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் குல்தீப் வருண் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித்சர்மா 76, ஸ்ரேயாஸ் அய்யர் 48, அக்சர் பட்டேல் 29, கே.எல்.ராகுல் நாட்அவுட்டாக 34 ரன் எடுத்தனர். 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது. ரோகித்சர்மா ஆட்டநாயகன் விருதும், ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களது சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களது சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது. எங்கள் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர். கே.எல்.ராகுல் பந்துகளை சரியாக தேர்வு செய்து அடித்து, அமைதியான முறையில் விளையாடி, திறமையை வெளிப்படுத்தினார். அவரை சுற்றியிருந்த நெருக்கடியை பற்றி கவலை கொள்ளாமல் விளையாடினார். ஹர்திக் ஒரு பேட்டர் எப்படி ஆடவேண்டும் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் காட்டி வருகிறார்.

வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டார். இதுபோன்ற ஆடுகளத்தில் வருண் போன்ற வீரர் கண்டிப்பாக அணிக்கு தேவை. முதல் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்த பிறகு இப்படிப்பட்ட ஒரு பவுலரை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தோம். அது எங்களுக்கு அதிர்ஷ்டமாக மாறியது. இதேபோன்று கீழ் வரிசையிலும் பேட்ஸ்மேன்கள் இருக்கவேண்டும் என முடிவு எடுத்தோம். அது மற்ற வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்தது. 8வது வீரராக ஜடேஜா பேட்டிங் செய்ய வருவது எங்கள் பேட்டிங் வலிமையை காட்டுகிறது. மீண்டும் எங்கள் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு போட்டிக்கும் அதிக அளவு ரசிகர்கள் கூடும்போது அது நிச்சயம் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரோகித் கூறுகையில், “2019 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசினேன். ஆனால் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்தியா வெற்றி பெறும்போது, நமது பங்களிப்பும் இருப்பது மன நிறைவை அளிக்கிறது. நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இந்த கோப்பையை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அனைவரும் நாங்கள் வெல்ல வேண்டும் என்று விரும்பினர். ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு சைலண்ட் ஹீரோ. மிடில் ஆர்டரில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. இன்றைய ஆட்டத்தில் கூட என் விக்கெட் வீழ்ந்த பின், அவரும் அக்சர் படேலும் இணைந்து சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். எனது எதிர்கால திட்டம் என்ன என்பது எதிர்காலத்தில் தெரியும். ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வுபெறும் எண்ணம் கிடையாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்’’ என்றார்.

சுப்மன்கில் : நான் ஆட்டம் இழந்த பிறகு ரோகித் சர்மாவின் பேட்டிங்கை ரசித்தேன். அவர் ஆடும் விதத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார். 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை தவறவிட்டோம். தற்போது 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

விராட் கோஹ்லி: ஆஸி. தொடரில் தோல்விக்கு பின் நாங்கள் எழுச்சி பெற விரும்பினோம். இந்த தருணம் மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. இளைஞர்களோடு சேர்ந்து ஆடுவதில் மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் அணியை சரியான திசையில் முன்னோக்கி எடுத்து செல்கிறார்கள். அவர்களிடம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஸ்ரேயாஸ், கில், ராகுல் அற்புதமாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடினர்.

கே.எல்.ராகுல்: நான் களத்தில் பேட் செய்த போது நம்பிக்கையுடன் தான் இருந்தேன். ஏனென்றால் எனக்கு பின் 2 பேட்டர்ஸ் உள்ளனர் என நன்றாக தெரியும். இதன் மூலம் கவனத்துடன் விளையாடினேன். போட்டியை முடித்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியவில்லை. அனைவரும் முழு திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிசிசிஐ கிரிக்கெட்டை சிறப்பாக வளர்த்து வருகிறது. இதனால் தான் ஒவ்வொரு இளம் வீரர்களும் எந்த அழுத்தத்தையும் சமாளித்து வரக்கூடிய திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

20-25 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்;
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறுகையில், “இந்த தொடர் எங்களுக்கு மிகவும் ஒரு நல்ல தொடராக அமைந்தது. தொடர் முழுவதும் எங்களுக்கு பல சவால்கள் அளிக்கப்பட்டது. அதனை ஒரே அணியாக இணைந்து எதிர்கொண்டோம். இன்று ஒரு பலமான அணியால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இன்று பவர் பிளேவில் தொடர்ந்து சில விக்கெட் இழந்தது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதற்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். நாங்கள் 20, 25 ரன் குறைவாக அடித்துவிட்டோம். ரோகித், கில்லும் அபாரமாக விளையாடினர். குறிப்பாக ரோகித் சர்மா ஆடிய ஆட்டம் மிகவும் பிரமிப்பாக இருந்தது. ரச்சின் பேட், பந்துவீச்சில் முக்கியமான கட்டத்தில் கை கொடுக்கின்றார். இளம் வயதிலேயே கிரிக்கெட் குறித்து அவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்றார்.

The post 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்று சாதனை; கோப்பையை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அர்ப்பணிக்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: