இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன், பெலிண்டா

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்கவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிந்தன. அதிலொரு ஆட்டத்தில் குரோஷியா வீராங்கனை டோனா வேகிச், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் ஆகியோர் மோதினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து மாறி மாறி முன்னிலைப் பெற்றனர். முதல் செட்டை வேகிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டை மேடிசன் 7-6(9-7) என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார்.

ஆளுக்கொரு செட்டை கைப்பற்றியதால் நடந்த 3வது செட்டையும் மேடிசன் 6-3 என்ற கணக்கில் தனதாக்கினார். அதனால் 2 மணி 18 நிமிடங்கள் தொடர்ந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். உலகின் 3ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப், 58ம் நிலை வீராங்கனை சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச் ஆகியோர் மோதிய ஆட்டத்திலும் அனல் பறந்தது. சுமார் 2மணி 20நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில், முந்திய பெலிண்டா 3-6, 6-3, 6-4 எனற செட்களில் காஃபுக்கு அதிர்ச்சி தோல்வியை தந்தார்.

காலிறுதிக்கும் முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன்-பெலிண்டா ஆகியோர் மோத உள்ளனர். அதேபோல் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா(பெலாரஸ்), லுடிமிலா சம்சோனோவா(ரஷ்யா) ஆகியோரும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் வெற்றிப் பெற்ற கார்லோஸ் அலகராஸ்(ஸ்பெயின்), ஜாக் டிராபர்(கிரேட் பிரிட்டன்), பிரான்சிஸ்கோ செருன்டோலோ(அர்ஜென்டீனா) ஆகியோர் காலிறுதியில் விளையாட உள்ளனர்.

The post இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன், பெலிண்டா appeared first on Dinakaran.

Related Stories: