9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. பாதுகாப்பு காரணமாக இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடந்த 2013ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கோப்பை கைப்பற்றியதற்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘‘ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை நமது நாட்டிற்கு கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்கு காரணமான வீரர்கள், உறுதுணையாக இருந்த நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் “இது ஒரு தனித்துவமான போட்டி மற்றும் தனித்துவமான தருணம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் நம் நாட்டுக்கு கொண்டு வந்த நமது கிரிக்கெட் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். கோப்பையை கைப்பற்ற கடினமாக உழைத்துள்ளனர். அனைத்து வீரர்களுக்குமே இந்த வெற்றியில் பங்குண்டு. அற்புதமாக விளையாடி நாட்டை பெருமைகொள்ள செய்த நமது அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது `எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகத்தான வெற்றி, வீரர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான இதயங்களை பெருமையால் நிரப்பியுள்ளீர்கள். அற்புதமான தனிப்பட்ட செயல்திறன் மற்றும் களத்தில் அபார ஆதிக்கம் செலுத்தியதன் மூலம், போட்டியில் இந்திய அணியின் அற்புதமான ஆட்டம் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. வாழ்த்துகள் சாம்பியன்ஸ்’’ என்று கூறியுள்ளார். இதேபோல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குதூகலிக்கும் வகையிலான வெற்றி;முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், “இந்திய அணிக்கு இது ஒரு மிக சிறந்த நாள். சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கும், வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்துக்கும் வாழ்த்துக்கள். ரோகித் சர்மாவும் அவரது வீரர்களும் மிக கடினமான சூழலில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றியுள்ளனர். முக்கியமான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, இறுதி வரை நிதானம் தவறாமல் ஆடி, நாட்டு மக்கள் போற்றத்தகும் வகையில், இந்திய ரசிகர்கள் குதூகலிக்கும் வகையில் ஒரு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். கடந்த ஆண்டு டி20 உலககோப்பை, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என தொடர்ச்சியாக வாகை சூடி வரும் நமது அணி மீண்டும் ஒரு முறை கிரிக்கெட் அரங்கத்தில் தனித்துவத்தை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
The post சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அபாரம்; இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து: கோடிக்கணக்கான இதயங்களை பெருமையால் நிரப்பியுள்ளீர்கள் என பாராட்டு appeared first on Dinakaran.