டபிள்யூபிஎல் டி20 பிளேஆப் சுற்று: பெங்களூரு, உபிக்கு கெட்அவுட்டு; டெல்லி, குஜராத்துக்கு கட்டவுட்டு

லக்னோ: மகளிர் பிரிமியர் லீக் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, குஜராத், மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. பெங்களூரு, உபி அணிகள் லீக் சுற்றிலேயே பின்தங்கி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளன.

மகளிர் பிரிமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 லீக் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ்-ஆர்சி பெங்களூரு அணிகள் மோதின. லக்னோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த அந்த போட்டியில் பெங்களூரு 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நடப்பு சாம்பியனான பெங்களூருவுக்கு இது 5வது தோல்வி. இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 2 ஆட்டங்களில் மட்டும் வென்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை. அதனால் பெங்களூரு லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

தவிர, பெங்களூருவை தோற்கடித்த உபியும் வெளியேற உள்ளது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளி மட்டுமே பெற்றுள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. அதே நேரத்தில் முதல் 3 இடங்களை பிடித்த டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. அவற்றில் டெல்லி கேபிடல்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், மும்பை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் இருக்கின்றன. எஞ்சிய ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகள் பெறும் வெற்றியைப் பொறுத்து புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்கள் யார், யாருக்கு என்பது முடிவாகும். தொடரின் எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் மும்பை இன்று குஜராத் அணியுடனும், நாளை பெங்களூர் அணியுடனும் மோதுகிறது. முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக மார்ச் 15ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அடுத்து 2வது, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மார்ச் 13ம் தேதி விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி பைனலில் களம் காணும்.

The post டபிள்யூபிஎல் டி20 பிளேஆப் சுற்று: பெங்களூரு, உபிக்கு கெட்அவுட்டு; டெல்லி, குஜராத்துக்கு கட்டவுட்டு appeared first on Dinakaran.

Related Stories: