திருப்போரூரில் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

 

திருப்போரூர்: தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்டுறவு கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொங்கல் தொகுப்பு பெறுவதற்காக டோக்கன் வீடு வீடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. திருப்போரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் திருப்போரூர், தண்டலம், கண்ணகப்பட்டு, காலவாக்கம், சாலவான்குப்பம், பட்டிபுலம், வட நெம்மேலி, செங்காடு ஆகிய இடங்களில் 11 கூட்டுறவு கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த, கூட்டுறவு கடைகளில் மொத்தம் 8,735 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றுக்கு, பொங்கல் தொகுப்புகளுக்கான டோக்கன் வழங்கும் பணிகள் கடந்த 3ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இதுவரை, 75 சதவீத டோக்கன் வழங்கும் பணிகள் முடிந்துள்ளதாகவும், விரைவில் 100 சதவீத டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடையும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்போரூரில் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: