ரூ.6 கோடி பொது சொத்துக்களை மீட்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவாரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு, டிபன்ஸ் காலனி பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள பொது சொத்துக்களை மீட்க வலியுறுத்தி டிபன்ஸ் காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் சார்பில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பாரத்ராஜேந்திரன், அதிமுக 21வது வார்டு செயலாளர் நூருல்லா ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை 11:30 மணியளவில் முற்றுகையிட்டு நகராட்சி ஆணையர் ராணியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில்,‘டிபன்ஸ் காலனி பகுதியில் டிபன்ஸ் செவிலியன் கோ-ஆபரேடிவ் சொசைட்டி மூலம் 1985ம் ஆண்டு 16.96 ஏக்கர் நிலத்தில் லே-அவுட் போடப்பட்டது. அந்த மனைப்பிரிவு வரைபடத்தில் பூங்கா, தண்ணீர் குளம் மற்றும் பொது இடம் ஆகியவை பொது பயன்பாட்டிற்கான ஒதுக்கப்பட்டது. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.6 கோடி மேற்கண்ட சொசைட்டியின் செயல்பாடுகள் முடிந்துவிட்ட காரணத்தால் சொசைட்டி கலைக்கப்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டு கலைக்கப்பட்ட சொசைட்டியின் முகவரியில் போலியாக ஒரு நபர் சொசைட்டி தனி அலுவலர் என்ற போர்வையில் பொதுநலத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தனி நபருக்கு போலியான மூலம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2005ம் ஆண்டு பதிவு செய்துள்ளார். அவற்றை பல மனைகளாக பிரித்தும் விற்பனை செய்துள்ளார்.

மேலும், போலியாக பதிவு செய்த ஆவணங்களை கொண்டு வருவாய் துறையினர் பட்டா வழங்கி உள்ளனர். இதில், வீடு கட்டுவதற்கு நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகத்தால் (தற்போது நகராட்சி) கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது, இதுகுறித்து எங்கள் நல சங்கம் சார்பில் பேரூராட்சியிடம் முறையிட்டும் பயன் இல்லை. இதுகுறித்து பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மேற்கூறிய அனைத்து இடங்களையும் மீட்டு தர கோரி மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தோம். அதன்பேரில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யாமல் காலத்தை கடத்தி வருகின்றனர்.

எனவே, கடந்த 10 ஆண்டுகளாக நிலவில் உள்ள பொது இடங்களை கையாகப் படுத்தி அறிவிப்பு பலகையை வைக்கும் படியும் நகராட்சி நிர்வாகத்தின் பேரில் பட்டா மாற்றம் செய்திடவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் ராணி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதில், டிபன்ஸ் காலனி குடியிருப்போர் நல வாழ்வு சங்க தலைவர் நாகராஜன், பொருளாளர் கலிபத்துல்லா, மதிமுக நகர பொருளாளர் செங்குட்டுவன், இளைஞர் அணி துணை செயலாளர் அஜ்மீர் உட்பட ஏராளமான உடன் இருந்தனர்.

The post ரூ.6 கோடி பொது சொத்துக்களை மீட்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: