மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்: 2 கிராம மக்கள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ளூர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால் 2 கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 6 மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். மேற்கண்ட, மாதங்களில் உள்நாட்டு பயணிகளை விட வெளிநாட்டு பயணிகளே அதிகளவில் வருகின்றனர்.

மேலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை – ஒன்றிய சுற்றுலாத் துறை இணைந்து ஒரு மாதம் நடைபெறும் இந்திய நாட்டிய திருவிழா கடந்த டிசம்பர் 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நாட்டிய விழாவை காண தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் குவிந்து வருகின்றனர். இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பக்தர்களும் குவிந்து வருவதால், மாமல்லபுரம் களைகட்டி காணப்படுகிறது.

மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிருஷ்ணா மண்டபம், அர்ஜூனன் தபசு மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை சுலபமாக சுற்றிப் பார்க்கின்றனர். 500 மீட்டர் தூரம் உள்ள கடற்கரை கோயில், 1 கிமீ தூரம் உள்ள ஐந்து ரதம் ஆகியவற்றை சுற்றிப் பார்க்க நீண்ட தூரம் நடந்து செல்ல முடியாமல், ஷேர் ஆட்டோ பிடித்து செல்கின்றனர். மேலும், ஓட்டுனர்கள் ஷேர் ஆட்டோக்களை முறையாக சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல், நடுரோட்டில் சாலையை மறித்து பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதில், குறிப்பாக தென் மாட வீதியில் ஷேர் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், உள்ளூர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமமடைகின்றனர். அதேபோல், கல்பாக்கம் சாலை பழைய சிற்பக் கல்லூரி சாலை, ஐந்து ரதம் சாலையில் ஆங்காங்கே ஷேர் ஆட்டோக்கள், சுற்றுலாப் பயணிகள் வானங்கள் சாலைகளை மறித்து நிறுத்தப்படுவதால், வெண்புருஷம் மற்றும் கொக்கிலமேடு ஆகிய 2 கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது.

இதனால், பொதுமக்கள் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும், கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் அடித்துச் செல்பவர்கள், விபத்தில் சிக்குபவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட போலீஸ் எஸ்பி சாய்பிரனீத் உடனடியாக தலையிட்டு மாமல்லபுரத்தில் சாலையை மறித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களை உள்ளூர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், வாகனங்கள் சிரமமின்றி வெளியே செல்லும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* முக கவசம் அணிய வேண்டும்
மாமல்லபுரத்துக்கு தினமும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அப்படி, வருபவர்கள் யாரும் முக கவசம் அணியாமல் சுற்றுகின்றனர். தற்போது, இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் 4 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாமல்லபுரம் வரும் பயணிகள் முககவசம் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்: 2 கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: