அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது: காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் 75 பேரை, போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாநில தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் முத்துசுந்தரம் தலைமையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்பாட்டத்தில் தோழமை சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் உள்பட 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுப்பட்ட உரிமைகளை வழங்கிடவும், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், திடீரென காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினரை, போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச்சென்று, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலை விடுதலை செய்தனர். இந்த, திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்று, குறிப்பாக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிறுப்ப வேண்டும் என 21 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

The post அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது: காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: