திருப்போரூர்: முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5.23 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நவீன மிதக்கும் படகு உணவகத்தினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந்திரன் திறந்து வைத்தனர். சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. இந்த, படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்கும் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப்பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், கப்பல் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதால், அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ரூ.5.23 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நவீன மிதக்கும் படகு உணவகத்தை திறந்து வைத்தார். அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் படகு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பலூன்களை பறக்க விட்டார்.
பின்னர், அமைச்சர் ரா.ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் பங்களிப்புடன் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக ரூ.5 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் இந்த மிதக்கும் படகு உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதியதாக திறக்கப்பட்ட படகு உணவகத்தினை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தலாம். தனிநபர் கட்டணம், குழு கட்டணம், தனியார் நிறுவன ஊழியர்களுக்கான கட்டணம் போன்றவை இன்று அறிவிக்கப்படும். இங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வாய்ப்புள்ள மற்ற இடங்களிலும், இதுபோன்ற படகு உணவகம் தொடங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 300 சுற்றுலா மையங்களை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், துணை தலைவர் சத்யா சேகர், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், முட்டுக்காடு படகு குழாம் உதவி மேலாளர் பாஸ்கரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் சந்தரமோகன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5.23 கோடியில் நவீன மிதக்கும் படகு உணவகம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.