இங்கு, தினசரி 2500 முதல் 3000 பேர் வரை பூங்காவுக்கு பார்வையாளர்களாக வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள உயிரினங்களை 24 மணி நேரமும் நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. பூங்காவில் புதிதாக ‘நீர்வாழ் உயிரின காட்சி சாலை’ ரூ.23 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. சமீபத்தில் புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த பூங்கா என்கிற விருதை இது வென்றது. இந்நிலையில் இப்பூங்காவை மேலும் மேம்படுத்திட மேலும் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3டி மற்றும் 7டி திரையரங்கம் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து, அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதில், பார்வையாளர்கள் புதிய வழிமுறையில் வனவிலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட பூங்கா அருங்காட்சியகத்தில், பல்வேறு உயிரினங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும் என்றும், இதற்காக ரூ.4.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியாசாகு அரசாணை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, தொழில்நுட்ப தியேட்டர் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்பதுடன், அவை தொடர்பான திரைப்படங்களை நவீன தொழில்நுட்பத்தில் பார்த்து ரசிக்கும் வகையில், 7டி தியேட்டர் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.4 கோடி செலவில், 32 இருக்கைகளுடன் இந்த தியேட்டர் கட்டப்பட்டுள்ளது. இதில், அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த 7டி திரையரங்கை அமைச்சர் பொன்முடி கடந்த 18ம் தேதி திறந்து வைத்தது மட்டுமல்லாமல், அங்கு அமர்ந்து விலங்குகள் தொடர்பான 3 நிமிட சினிமாவையும் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் இந்த 7டி திரையரங்கை காண தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சிறுவர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக அமைத்துள்ள 7டி திரையரங்கில் சிறுவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.