புதுக்கோட்டை: திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை காலணி அணிய மாட்டேன் என்று கூறி முடிவு எடுத்து இருந்தால், அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணாமலை சாட்டையால் அடித்து கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு தண்டனை.
அல்லது பாவ விமோசனம். அண்ணாமலை செய்த தவறுகளுக்கு பாவம் விமோசனத்திற்காக சாட்டையால் அடித்து கொண்டாரா? அல்லது அவர் ஏதாவது தவறு செய்ததற்காக தனக்குத்தானே தண்டனை விதித்து கொண்டு சாட்டையால் அடித்து கொண்டாரா என்பது கேள்வியை தவிர திமுக அரசு எந்த பாதகமும் அவருக்கு செய்யவில்லை. பாஜவில் பழனி பாதயாத்திரை செல்வதற்காக 40 நாட்கள் காலணி அணியாமல் இருப்பார்கள். ஆண்டு கணக்காக கூட காலணி அணியாமல் இருப்பார்கள்.
அதேபோல் அண்ணாமலையும் இரண்டு ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு இருக்க அவ்வாறு கூறியுள்ளார். திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை காலணி அணிய மாட்டேன் என்று கூறி அண்ணாமலை முடிவு எடுத்து இருந்தால் அவர் வாழ்நாள் முழுவதும் காலணி அணிய முடியாது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் புகார் கொடுத்தவர்களுக்கு ஒரு எப்ஐஆர் காப்பி கொடுக்கதான் வேண்டும். அவர்கள் மூலமாக கூட அந்த எப்ஐஆர் காப்பி வெளியே வந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் ஏற்கனவே குற்றவாளி என்பது தற்போது தான் அனைவருக்குமே தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு யாருக்கும் தெரியவில்லை. ஏற்கனவே பல வழக்குகளில் அவர் தேடப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில் இனிமேதான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவர் யார் என்று தெரியாது, கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை, அவரை காப்பாற்ற வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது. நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் நடந்ததால் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வாசலிலும் பாதுகாப்பு போட வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சரோடு ஆலோசித்து அங்கும் பாதுகாப்பு போடப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தை அப்போதைய அரசே மறைத்தது நாங்கள் அவ்வாறு மறைக்கவில்லை. எவ்வளவு போராட்டங்கள் நடந்தது அந்த போராட்டத்திற்கு பிறகு தான் அது வெளியே வந்தது, அந்த விவகாரம் வேறு. அது அரசாங்கத்தால் மறைக்கப்பட்ட வழக்கு இது அரசாங்கத்தால் மறைக்கப்படாத வழக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
The post திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தால் அண்ணாமலை வாழ்நாளில் செருப்பு அணிய முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.