×

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்


சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடிவு பெறவுள்ள பணிகள் முதற்கட்டமாக அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, காமராஜர் சாலை, தீவுத்திடலில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3.10 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கம், கண்காட்சி அரங்கங்கள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகள் கொண்ட கட்டடம் கட்டும் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர் பாலமுருகன், மண்டல அலுவலர்கள் பரிதா பானு, முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சென்னை, காமராஜர் சாலை, தீவுத்திடலில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் 3.10 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கம், கண்காட்சி அரங்கங்கள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகள் கொண்ட கட்டடம் அமைக்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டேன். சென்னை தீவுத்திடலில் 1.60 லட்ச சதுர அடி பரப்பளவில் 40 கடைகள், 200 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் என வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதே போல் இந்த கட்டிடத்தில் 90 கழிவறைகள் கட்டப்பட உள்ளது. குறிப்பாக திருநங்கைகளுக்கென தனி கழிப்பறை வசதியும் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிகள் நிறைவுபெறும் பொழுது 40 அரங்குகள் சுமார் 1000 சதுர அடி நிலப்பரப்பில் அமைய உள்ளது. அரங்க முதல் தளத்தில் 20 ஆயிரம் சதுர அடிக்கு கண்காட்சியகத்தின் அரங்கமும், 20 ஆயிரம் சதுர அடியில் உணவகமும் அமைய உள்ளது. ஒரே நேரத்தில் 400 இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகளை தினமும் களஆய்வு மேற்கொண்டு வருவதை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக 2025 பிப்ரவரி மாதம் முடிவு பெற உள்ள பணிகள் படிப்படியாக மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அந்தவகையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த பணிகளானது வடசென்னை வளர்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டையால் அடித்துக் கொண்ட விவகாரம் பொறுத்தவரையில், வெறும் விளம்பரத்திற்காக செய்தது. அண்ணாமலை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் அவர் நிச்சயமாக காலில் செருப்பு அணிய மாட்டார். ஏனெனில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திராவிட மாடல் ஆட்சி தான் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்

The post வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : VATCHENNAI DEVELOPMENT ,MINISTER ,SEKARBABU ,Chennai ,KAMARAJAR ROAD, THIUTHIDIL, CHENNAI ,North Chennai ,Dinakaran ,
× RELATED வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிறைவு...