மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்: அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அரைசதம்

மெல்போர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி நடந்து வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடந்த 2வதுடெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றது. பிரிஸ்பேனில் நடந்த 3வது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் பாக்சிங் டே போட்டியான மெல்போர்னில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. சுப்மன் கில்லுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தார். காயம் காரணமாக கில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக ஹேசல்வுட் விலகியதால் போலண்ட், தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு அறிமுக வீரராக 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார்.

கவாஜாவுடன் சாம் கோன்ஸ்டாஸ் தொடக்க வீரராக களம் இறங்கினார். முதல் 4 ஓவர் பொறுமையாக ஆடிய சாம் கோன்ஸ்டாஸ் பின்னர் அதிரடியில் இறங்கினார். பும்ரா பந்துவீச்சையும் அடித்து நொறுக்கினார். 52 பந்தில், 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவரை கட்டுப்படுத்த இந்திய அணி வகுத்த வியூகங்கள் கைகூட வில்லை. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடியதால் சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாவை, கேப்டன் ரோகித்சர்மா கொண்டு வந்தார்.

இதற்கு பலன் கிடைத்தது. அவர் வீசிய 20 ஓவரில் கோன்ஸ்டாஸ் (60 ரன், 65 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எல்பிடபிள்யூ ஆனார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 89 ரன் எடுத்து சிறந்த தொடக்கம் அளித்தது. இதையடுத்து லாபுசேன் களம் இறங்கினார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 25 ஓவரில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 112ரன் எடுத்திருந்தது. கவாஜா 38, மார்னஸ் லாபுசாக்னே12 ரன்னில் களம் இருந்தனர். பின்னர் ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுமையாக ஆடினர். கவாஜா 101 பந்தில் 27வது அரைசதத்தை அடித்தார்.43வது ஓவரில் ஆஸ்திரேலியா 150 ரன்னை கடந்தது. கவாஜா 57ரன்னில் பும்ரா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கோஹ்லி-கோன்ஸ்டால் மோதல்;
ஆஸி. அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடினார். அவர் பும்ராவை குறிவைத்து ரன் சேர்த்தார். பும்ராவின் 33 பந்துகளில் 34 ரன் சேர்த்தார். 10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கோஹ்லி வேண்டும் என்றே தான் நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார். பின்னர், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அம்பயர்கள் இடைமறித்து இருவரையும் சமாதானம் செய்தனர். இதனிடையே கோஹ்லியின் இந்த செயலுக்கு ரிக்கிபாண்டிங் கண்டனம் தெரிவித்தார். கோஹ்லி வேண்டுமென்றே இடித்த விவகாரம் தொடர்பாக போட்டி நடுவர் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

4483 பந்துகளுக்கு பின் பும்ரா பந்தில் சிக்சர்;
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்தில் ,ஆஸ்திரேலிய அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இன்று சிக்சர் அடித்தார். 2021ம் ஆண்டுக்கு பின் டெஸ்ட்டில் பும்ரா பந்தில் சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. 4483 பந்துகளுக்கு பின் பும்ரா பந்தில் சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்: அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அரைசதம் appeared first on Dinakaran.

Related Stories: