தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய இராமாயணம்

ஆலயம்: இராமசாமி கோவில், கும்பகோணம்
காலம்: பொ.யு.1600-1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த மன்னர் ரகுநாத நாயக்கரால் கட்டப்
பட்டது.

இராமாயண நிகழ்வுகளை எழில்மிகு சிற்பங்களாக பதிவு செய்திருக்கும் இராமர் ஆலயங்களில் குறிப்பிடத்தக்கவை 1. ஹம்பி ஹசாரா ராமசாமி கோயில் (கர்நாடக மாநிலம்), 2. கோதண்டராமசாமி கோவில், ஒண்டிமிட்டா (ஆந்திர மாநிலம்), 3. வேங்கடரமணர் கோவில், தாடிபத்ரி (ஆந்திர மாநிலம்) மற்றும் 4. ராமசாமி கோவில், கும்பகோணம்(தமிழ்நாடு).மேற்கண்ட ஆலயங்கள் போல் சிற்பங்கள் மட்டுமல்லாமல், இராமாயணக்காட்சிகளை முழுக்க ஓவியங்களாகவே வரையப்பட்டுள்ளதுசிறப்பு பெற்றது ‘தென்னக அயோத்தி’ என்றழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோவில் மட்டுமே! கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி இருக்கும் திருச்சுற்றை வலம் வந்தாலே, வரிசைக் கிரமமாக வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களின் மூலமாகவே இராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயினுள் நுழைந்தவுடன் அசர வைக்கும் அழகுடன் 62 தூண்களுடன் அமைந்துள்ள மகாமண்டபம் வரவேற்கிறது.

மிகுந்த கலையம்சம் பொருந்திய இக்கோயிலின் அமைப்பு, பிரம்மாண்ட தூண்கள், பெருமாளின் பல்வேறு அவதாரங்கள், இராமாயண ஓவியங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த பேரழகு சிற்பங்கள் என ஒவ்வொன்றும் பார்வையாளருக்கு பரவசம் ஏற்படுத்துகின்றன.மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள தூண்களின் ஒவ்வொரு பக்கத்திலும் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் போன்றோரின் ஆளுயர சிற்பங்கள் அற்புதமாக அமைத்துள்ளனர்.ராமர் பட்டாபிஷேகம், ராமர்-சீதை திருமணம், விபீஷணன் பட்டாபிஷேகம், சுக்ரீவன் பட்டாபிஷேகம், வணங்கும் நிலையில் அனுமன் போன்ற தூண் சிற்பங்களின் அழகும், சிற்ப நேர்த்தியும் வியக்க வைக்கின்றன.வடக்கு நோக்கிய ஆலய கருவறையினுள் பீடத்தில் பட்டாபிஷேகக் கோலத்தில் அமர்ந்த நிலையில் ராமர், சீதை, வணங்கி நிற்கும் லட்சுமணன்,குடை ஏந்தி பரதன், வெண்சாமரம் வீசும் சத்ருகனன், கையில் வீணையும், சுவடியையும் ஏந்தியிருக்கும் அனுமன் என அனைவரும் ஒருங்கே வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர்.

The post தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய இராமாயணம் appeared first on Dinakaran.

Related Stories: