கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது துக்காச்சி எனும் திருத்தலம். இத்தலத்தில்தான் 1300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஸ்ரீசௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகப் பழமையான இந்த ஆலயம் திமுக அரசால் புனரமைக்கப்பட்டு சென்ற வருடம், 3-9-2023 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்படி, இந்த ஆலயத்தை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைக்கப்பட்டதற்காக 2024ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ (UNESCO) விருது கிடைத்துள்ளது.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ‘துக்காச்சி’என்ற இந்த சிற்றூரின் பெயரைக் கேட்டவுடனேயே கலை, வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் சோழ மாமன்னர்களால் திருப்பணி செய்து வணங்கப்பட்ட ‘ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்’ நினைவுக்கு வரும். விக்கிரம சோழனின் கனவுக்கோயிலே துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் ஆகும். இதன் காலம் – கி.பி. 1118-1135 ஆகும். அருகிலுள்ள கூகூரில் இருக்கும் ஆதித்தேஸ்வரம் கோயிலில் உள்ள ராஜராஜனின் கல்வெட்டுக்கள், இவ்வூரை ‘விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதமங்கலம்’ (நால்வேதம் கற்ற அந்தணர்களுக்குத் தானமளித்த ஊர் – ‘சதுர்வேதமங்கலம்’) எனக் குறிப்பிடுகின்றன. பல்லவர்களின் பட்டப் பெயரான ‘விடேல் விடுகு’ என்ற பெயர் உள்ளதால், இவ்வூர் 7-8-ஆம் நூற்றாண்டிலிருந்தே சிறப்பு பெற்றிருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வூர், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் “குலோத்துங்கசோழ நல்லூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு, `திருக் காளத்தி மகாதேவர்’ என்ற பெயரில் வணங்கப்பட்டது. பின்னர் அவரது மகன் விக்கிரம சோழனால், சிற்பச் சிறப்புகளுடன் பெரும் திருப்பணிகள் செய்யப்பட்டு ‘‘விக்கிரமசோழீச்வரம்’’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு, இன்று ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என வணங்கப்படுகிறார்.
முதலாம் குலோத்துங்க சோழன் காலகட்டத்தில் ‘குலோத்துங்க சோழ நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது என்று பார்த்தோம். அவருடைய 30ஆம் ஆட்சி ஆண்டில் விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலத்து சபையோர் தென்திருக்காளத்தி மகாதேவருக்கு, நிலம் தானம் கொடுக்கப்பட்டதற்கான சான்றாக இங்கு கல்வெட்டு அமைந்துள்ளது. மேலும், இந்தக் கல்வெட்டுதான் இந்தக் கோயிலை தென் காளஹஸ்தி என்று அழைக்கச் சான்றாக உள்ளது. ஆந்திராவில் இருப்பது வட காளஹஸ்தி மற்றும் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த துக்காச்சி கோயில்தான் தென் காளஹஸ்தி என அறியமுடிகிறது.
ஆலயத்தின் மூலவர், அம்பிகை விமானங்கள், அர்த்த மண்டபம், மகா மண்டபங்கள், சுற்று மதில்கள் போன்றவை ராஜராஜ சோழன் காலத்தவையாகும். அதன் தொடர்ச்சியாக துர்கைக்காக அனைத்து வகை கலை நுணுக்கங்களுடனும் கூடிய மற்ற மண்டபங்களை இன்னும் மேம்படுத்தி விக்ரம சோழன் பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளான் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.
அரிசில் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள, இத்தலத்தில் துர்க்கை அம்மன் இறைவனை வணங்கியதால், ‘‘துர்க்கை ஆட்சி’’ என்ற பெயர் ‘‘துக்காச்சி’’ என மருவியது. கரண்ட மகுடத்துடன், கோரம் வெளிப்படும் முக உணர்வுகளுடன், எட்டுக் கரங்கள் கொண்டு கீழே மகிஷனை வதம் செய்யும் உக்கிர வடிவில் தனிக் கோயிலில் பேரழகு துர்க்கை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள சரபேஸ்வரர் திருமேனி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதை ஆதி சரபேஸ்வரர் என்று அழைக்கின்றனர். விநாயகர் பேருருவத்துடன் அமர்ந்த திருக்கோலத்திலும், வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, நின்ற திருக்கோலத்திலும் அமைந்துள்ளன. நவ நிதிகளையும் அருளும் குபேரனின் திருமேனி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
‘பலகணி மாடம்’ அமைந்த அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம், ‘திரி தள’ கருவறை விமானம், சக்கரத்துடன் உள்ள தேர் மண்டபத்தினை யானையும் குதிரையும் இழுத்துச் செல்வது போன்ற அமைப்பு, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், வசந்த மண்டபங்கள், உட்புற விதானங்களில் உள்ள சிற்ப நுணுக்கங்கள் என ஒவ்வொரு அம்சமும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளது.
தன்னை அண்டி வந்த பக்தர்களின் ஆபத்திலிருந்து காத்து சகாயம் செய்வதால் இவர் ஆபத்சகாயேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாது அவர்களின் வாழ்க்கையை அழகு செய்வதால் அம்பாளை சௌந்தரநாயகி என்று அன்போடு அழைக்கிறார்கள்.
எப்படிச் செல்வது? கும்பகோணத்திற்கு அருகேயுள்ள நாச்சியார் கோயிலுக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
The post துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது appeared first on Dinakaran.