மஹா சரஸ்வதியின் மகத்துவம்

இந்த மஹாசரஸ்வதி எங்கு இருக்கிறாள் எனில், நம்முடைய பஞ்ச கோசங்களான அன்ன மய, பிராண மய, மனோ மய, விஞ்ஞான மய, ஆனந்த மய… என்று எல்லா கோசங்களையும் இயக்கக் கூடிய சித்சக்தியாக எவள் இருக்கிறாளோ, அறிவு ரூபமாக எவள் இருக்கிறாளோ அவளே மஹாசரஸ்வதி. அதனால்தான் லலிதா சஹஸ்ரநாமம் சித்சக்தி சேதனா ரூபா… அறிவுடைய பொருள்களுக்குள் நீதான் அறிவாய் இருக்கிறாய் என்று சொல்கிறது. இப்போது ultimate ஞானம் என்று சரஸ்வதியை பார்த்தோம். தினசரி வாழ்க்கையில் நம்முடைய அறிவு எப்படி வெளிப்படுகிறது. சரஸ்வதி எப்படி வெளிப்படுகிறாள். வாக்காக வெளிப்படுகிறது. எதெல்லாம் நமக்கு அறிவோ அதெல்லாம் நமக்கு வாக்காக இருக்கிறது. பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்று நான்கு சொரூபங்களில் வெளிப்படுகிறாள். வைகரீ என்பது நம்முடைய பேசும் தளமாகும். நமக்கு AI பற்றி யாராவது வாக்காக சொல்வதற்கு முன்பே அவருடைய மற்ற வாக்கின் நிலைகளான மத்யமா… பச்யந்தி… பரா வாக்கிலேயே அந்த விஷயத்தை குறித்து இருக்கிறது. அதுவே வைகரீயாக சாதாரண வாக்கில் வெளி வருகின்றது.

இந்த அறிவைக் கொண்டு வருபவளே சரஸ்வதி. அதனால்தான் நாம் பள்ளிக் கூடத்தில் தொடங்கி… கல்லூரி என்று தொடர்ந்து தத்துவார்த்தமான, ஞானியின் வாக்கிலிருந்து வரும் வாக்கு வரையிலும் சரஸ்வதியின் சாந்நித்தியமே ஆகும். சரி, இப்போது இந்த புராணங்களில் ஏன் இத்தனை அசுரர்களை கொன்றாள் என்று பார்ப்போமா? இந்த விஷயத்தின் அந்தர்முகமான – உள்முகமான தத்துவத்தை பார்ப்போம் வாருங்கள். சண்டன், முண்டன், தூம்ரலோசனன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் எல்லாருமே தேவி மகாத்மியத்தில் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடத்தில் நமக்குள் அமர்ந்து எப்படி ஞானத்தடையை ஏற்படுத்துகிறார்கள் என்பதை அறிய வேண்டும். இந்த அறிவு, வாக்கு, ஞானம் போன்றவற்றிற்கெல்லாம் என்னென்னவெல்லாம் பிரதிபந்தங்கள் அதாவது தடைகள் வரும் என்று யோசித்தால் இந்த அசுரர்களே இந்தத் தடைகள் என்பதை அறிவோம். இந்தத் தடைகளைத்தான் மஹாசரஸ்வதி ஒவ்வொன்றாக சம்ஹாரம் செய்கிறாள்.

முதலில் சண்டனையும் முண்டனையும் பார்த்தோம். சில நேரங்களில் அறிவு அல்லது வாக்கு வெளிப்படும்போது என்ன என்ன தடை வருமெனில், சண்டன் தான் முதலில் வருவான். சண்ட என்றால் வேகம் என்று அர்த்தம். எல்லா விஷயத்தையும் அவசர அவசரமாக அள்ளித் தெளிக்கும் விதமாக வருபவனே சண்டன். ஒன்றை தெரிந்து கொள்வதில் நம்முடைய வாக்கில் இருக்கக் கூடிய ஒரு அவசரத்தன்மை இருக்குமல்லவா அவனே சண்டன். அந்த அவசரத் தன்மையையே அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள். இதுவே சண்ட வதம். இதற்கடுத்து முண்டன் இருக்கிறான். சாதாரணமாக தலையில்லாமல் இருக்கக் கூடிய உடலுக்கு முண்டம் என்று பெயர். முண்டன் என்றால் that which is incomplete. நம்முடைய வாக்கு மூலமாக அறிவை பெறுவதற்கோ அல்லது வெளிப்படுவதற்கோ நமக்கு ஒரு தடை வரும். ஏதேனும் சொல்ல வேண்டுமென்றோ அல்லது செய்ய வேண்டுமென்றோ நினைப்போம் ஆனால், செய்ய முடியாது. இப்படி முழுமையறிவற்ற நிலையில் உள்ளவனுக்கே முண்டன் என்று பெயர். இவனையும் அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள். அவசரத்தன்மை என்கிற சண்டனையும், முழுமையற்ற அறிவை உடையவனான முண்டனையும் அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள்.

இது எதைக் காட்டுகிறதெனில் சிறிய அறிவிலிருந்து ஞானத்தை அடையப் போகும் வரையிலான தடையை (obstacles) அம்பாள் எப்படி அகற்றுகிறாள் என்பதே இதன் மையமாகும். இதற்கு அடுத்து தூம்ரலோசனன் வருகிறான். தூம்ர லோசனன் என்றாலே புகை நிறம் வாய்ந்த கண்களை உடையவன் என்று பொருள். அவனுடைய கண்கள் புகை மாதிரி இருக்கும். புகை அடிப்பது என்றால் என்ன அர்த்தமெனில், வெகு எளிதானது. இப்போது ஒரு இடத்தில் புகை அடித்திருந்தால் அதை நம்மால் தெளிவாக பார்க்க இயலாது. அப்போது எங்கு clarity இல்லையோ, un clear ஆக இருக்கிறதோ அந்த இடம்தான் தூம்ரலோசனன். சாதாரண அறிவிலிருந்து பெரிய ஆத்ம ஞானம் வரையிலும் தெளிவாக பார்க்க இயலாதவாறு தடைகளை ஏற்படுத்துபவனே தூம்ரலோசனன். That which is un clear. இதை சம்ஹாரம் செய்வதுதான் தூம்ரலோசன வதம். இதற்கு அடுத்ததாக ரக்த பீஜன். எங்கேயெல்லாம் ரத்தம் சிந்துகிறதோ அங்கேயெல்லாம் அசுரர்கள் வருவார்கள். இப்போது நம்முடைய அறிவு அல்லது வாக்கு இருக்கிறதல்லவா இதை அறியப் புகும்போது நமக்கு ஒரு தடைவரும். இதற்கு complications என்கிற தடை வரும்.

நாம் எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை விட்டுவிட்டு சுற்றியுள்ள விஷயத்தை பார்த்து மயங்கி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை விட்டுவிடுவோம். ஒருமுறை இந்தக் குழப்பம் உண்டானால் மீண்டும் மீண்டும் இது பெருகுவதுபோல… இதனால் இது… இதனால் இது… என்று போய்க் கொண்டே இருப்பது ரக்த பீஜன் என்கிற அசுரத் தன்மை. என்னால் இது முடியாதா… செய்ய முடியாதா….என்று தொடர்ந்து நம்மை துரத்தும் இந்த குணத்தை அப்படியே அம்பாள் விழுங்கி சம்ஹாரம் செய்கிறாள். இதுவே ரக்தபீஜ வதமாகும். சின்ன complication கூட வராமல் ஒட்டு மொத்தமாக நாசம் செய்கிறாள். இப்போது இதெல்லாம் முடிந்ததற்கு பிறகு சும்பனும் நிசும்பனும் வருகிறார்கள். மேலே சொன்ன எல்லா அடிப்படை தடைகளை எல்லாம் அம்பாள் வதம் செய்து கொண்டே வரும்போது மேலான ஞான நிலைக்கு அருகே வருகிறோம். இப்படிப்பட்ட மேலான ஞான நிலைக்கு வரும்போது இந்த சும்பனும் நிசும்பனும் எதை காண்பித்துக் கொடுக்கிறார்கள் எனில், தமிழில் ஐயம், திரிபு என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில் விபரீத ஞானம், சம்சய ஞானம் என்பார்கள். ஞானத்திற்கு அருகே வரும்போது அந்த ஞானத்தை அறியக் கூடிய சரியான வாசனா பலம் இருக்க வேண்டும்.

குருவினுடைய அனுக்கிரகம் வேண்டும். பகவத் அனுக்கிரகம் வேண்டும். இவை எதுவும் இல்லையெனில் அஞ்ஞானத்தின் வாசனையினால் ஞானத்தையே நாம் விபரீதமாக தெரிந்து கொள்வதற்கான ஒரு சாத்தியக் கூறு இருக்கிறது. ஞானத்தை எடுத்துக் கொண்டால் அதை திரித்து அதாவது திரிபாக எடுத்து புரிந்து கொள்வோம். அறிந்து கொள்வோம். இதற்கு அடுத்து சம்சயம். நாம் தெரிந்து கொள்ளக் கூடிய ஞானத்திலேயே நமக்கு சந்தேகம் வந்துவிடும். ஞானம் சரிதான். இதெல்லாம் எனக்கு வருமா. இந்த சந்தேகம் என்கிற சம்சய ஞானம்தான் மிகப் பெரிய பிரதிபந்தம். தடை. இதை ஐயம் என்றும் விபரீத ஞானம் என்றும் சொல்கிறோம். இந்த விபரீத ஞானத்தையும், திரித்து புரிந்து கொள்வதையும் அம்பாள் சும்ப நிசும்ப வதமாக செய்து காட்டுகிறாள். இந்த அஞ்ஞானம் விபரீதமாக நம்மை ஏதாவது ஒன்றை நினைக்க வைக்கும். இது அல்ல… அது அல்ல… என்று ஏதேனும் ஒன்றை நினைக்க வைத்து குழப்பும். இப்படி அம்பாள் இதை இரண்டையும் அழித்தலே சும்ப நிசும்ப வதமாகும்.

அவசரத் தன்மையை அழிப்பது சண்ட வதம். முழுமையற்ற – incompleteness – அறிவை அழிப்பது முண்ட வதம். Un clear ஆக இருப்பதை அழிப்பது தூம்ரலோசன வதம். Complication ஐ அழிப்பது ரக்த பீஜ வதம். சம்சயத்தை விபரீதத்தையும் – ஐயம் திரிபையும் அழிப்பதுதான் சும்ப நிசும்ப வதம். இப்படி ஞானத்தை அடைவதற்கான எல்லாவிதமான தடைகளையும் அம்பாள் சம்ஹாரம் செய்து, பூர்ணமான ஞான சொரூபிணியாக மஹாசரஸ்வதியாக அம்பாள் காட்சி கொடுக்கிறாள். அந்த மஹாசரஸ்வதிதான் நாம் உணர வேண்டிய ஆத்ம ஞானம். நாம் பள்ளியிலோ அல்லது வெளியுலகிலோ தொடங்கும் சிறிய அறிவினில் தொடங்கி மிக மேன்மையான ஞானம் வரையிலும் இருக்கக் கூடிய மொத்த சொரூபம்தான் மஹாசரஸ்வதி. அந்த மஹாசரஸ்வதியைத்தான் நாம் சரஸ்வதி பூஜையன்று வழிபடுகின்றோம்.
பள்ளிச் சிறுவன் முதல் ஞானம் பெற்ற மகான் வரை எல்லோரும் மஹாசரஸ்வதியை வழிபடக் கூடிய காரணம், அவளே அனைத்து அறிவையும் ஞானத்தையும் அருளுவது மட்டுமல்லாமல் அதை அடைவதற்கு உண்டான தடைகளையும் தகர்க்கிறாள்.

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

 

The post மஹா சரஸ்வதியின் மகத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: