நித்திய வாழ்வளிக்கும் நிசும்பசூதனி

வாழ்வில் வெற்றி தோல்வி சகஜமென்றாலும், அனைவரும் இறைவனிடம் வேண்டுவது நாம் செய்யும் செயல்களில் வெற்றி பெற அருள்புரிய வேண்டும் என்பதே. அப்படி சோழர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாய் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டு இருப்பவள், நிசும்பசூதனி. அன்னை பராசக்தி துர்க்கையாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் பூண்டு, தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதைத் தேவி மகாத்மியம் உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறப்படும் `ராத்திரி சூக்தம்’ என்பதிலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன.

அசுரர்களை வதம் செய்தல்

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிகளையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் கொற்றவையை (துர்கை) நாடினர். கௌசீகி என்ற அழகிய பெண் உருவம் கொண்டிருந்த அம்பிகையை கண்டு சும்ப, நிசும்பர்களின் படைவீரர்களான சண்ட, முண்டர்கள் தங்கள் அரசனிடம்கூற, அவளை அடைய வேண்டும் என்று மோகம் கொண்டு, அவளை பிடித்து வர உத்தரவிட்டனர். தன்னை எவர் வெற்றி கொள்கிறாரோ அவர்களையே மணப்பேன் என்று கூறிய அன்னையிடம் சண்ட முண்டர்கள் போர் புரிய துவங்கினர். அம்பிகை உக்ர ரூபம் கொண்டு சண்ட முண்டர்களை அழித்தாள். அதன் பின், அசுர குல அரசர்களான சும்ப, நிசும்பர்களை அழித்து வெற்றி கொண்டு ‘நிசும்பசூதனி’ என்ற நாமம் கொண்டாள்.

மன்னர்களின் குலதெய்வம்

சோழர்கள் குல தெய்வமாக வணங்கிய அம்மன் நிசும்பசூதனி. கி.பி. 850ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோயில் எழுப்பினார். பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன், இந்த அம்மனை வணங்கிவிட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிபட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

நிசும்பசூதனியின் வித்தியாசமான தோற்றம்

சோழர்கள், நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம், 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் ஆகும். கருவறையில் அன்னை வேறெங்கும் காண முடியாத தோற்றத்தில் காட்சி தருகிறாள். ஏழு அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தோன்றும், எட்டு திருக்கரங்கள், தீச்சுவாலையாக திருமுடி. நிசும்பனின் தலை கொய்து, தலைமீது அழுத்திய மெலிந்த திருவடி, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், நிசும்பனை அழிக்கும் திரிசூலம் என அசுரன் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள் அன்னை. எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி தலையை சற்று சாய்த்தவாறு காட்சி அளிக்கிறாள் அன்னை. இங்கே வீழ்ந்து இருக்கும் நான்கு அசுரர்களும் சண்டன், முண்டன் மற்றும் சும்ப, நிசும்பர்கள் ஆவர். இந்த நிசும்பசூதனி சிற்பத்தினைப் போன்ற வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. சத்ரு சம்காரியாக, வெற்றித் தெய்வமாக காட்சி
தருகிறாள் நிசும்பசூதனி.

கல்வெட்டுகள்

பேரரசர்கள் தங்கள் வெற்றிக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயங்கள் அமைப்பது பண்டைய மரபு. தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலைத் தூண்கள் (நியமத்துத் தூண்கள்) சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் எடுப்பித்த நியமத்து மாகாளத்துப் பிடாரி கோயிலின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நியமத்து மாகாளத்துப் பிடாரி தேவியைப் பாண்டியன் மாறஞ்சடையன், தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜகேசரி வர்மனான ஆதித்தன் போன்ற பெரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் என்பதை அதே தூண்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இதே நெறியில்தான் விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதனியை பிரதிஷ்டை செய்தான்.

சோழரின் இறுதிப் போர்

சோழர்கள் ஆட்சியில், ஓயாது போர்கள் நடந்தன. கடல் கடந்து சென்றும் வெற்றிபெற்ற பெருமை சோழர்களுக்கு உண்டு. அவர்கள் ஒவ்வொரு முறையும் போருக்குச் செல்லும் முன்னும், வெற்றி பெற்று வந்த பிறகும், இந்த அம்மனை மனம் உருகி வேண்டத் தவறியது இல்லை. அதனாலேயே பெரும்பாலான போர்களில் வெற்றி பெற்றதோடு, அதிக வீரர்கள் மரணமடையாமல் திரும்ப வந்தது, நிசும்பசூதனியின் அருளே என்ற எண்ணம் திண்ணமாக சோழர்களுக்கு உண்டு. ராஜராஜ சோழன் இறுதியாக செய்த போரில் சாளுக்கியர்களை வென்று அவர்களின் செல்வங்களைக் கொண்டு வந்து பெரிய கோயில் பணிக்கு கொடுத்தார். கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவனாரது திருவுருவமும், காளி கோயிலை ஒட்டிய மணற்பகுதியில் மார்பு வரை புதைந்துள்ள கௌமாரி உருவமும் மிகப் பழமையான 8 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட சிற்பங்களாகும்.

புதுமையான வடிவில் திகழ்கிறாள்

பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோயிலாக அல்லது பிடாரி கோயிலாகத் தேவியின் திருமுற்றங்கள் காணப்படும். இங்கு இடம் பெற்றிருக்கும் திருவுருவங்கள் 4 அல்லது 8 கரங்களுடன் திகழும். பெயர்களும் காளி, காளாபிடாரி, பட்டாரகி என்பனவாகக் குறிக்கப்பெறும். ஆனால் தஞ்சையில் விஜயாலயன் பிரதிஷ்டை செய்த தேவிக்கு “நிசும்பசூதனி’’ என்ற சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இதனால், இவ்வடிவம் மற்றக் காளி, பிடாரி உருவங்களிலிருந்து மாறுபட்டுத் திகழ்ந்திருக்க வேண்டும். தஞ்சைக் குயவர் தெருவிலுள்ள உக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்படும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த, காளாபிடாரியாகவே காணப்படுகிறாள். ஆனால் தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெரு வடபத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள்.

இக்கோயில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோல உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2016 இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

ராகு, கேது நிவர்த்தி தலம்

இக்கோயிலுக்கு தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை அன்று, மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரையும் அல்லது வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையும் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் ராகு கால நேரத்தில் வழிபட்டால், ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும். இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நிவர்த்தியாகிவிடும்.

ஒரே இடத்தில் எண் திசை காளிகள்

அக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் காளி கோயில் அமைக்கப்பட்டது. இதில், முதலாவது காளி கோயில் வடபத்ர காளியம்மன் கோயில். எட்டு திசைக்கும் செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்தால், தூண்களில் உள்ள எண்திசை அம்பாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டுவிடலாம்.

ஆண்டுப் பெருவிழா

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாட்களுக்கு ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதில், பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

நடை திறக்கப்படும் நேரம்
காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் நடைதிறந்திருக்கும்.

கோயில் அமைவிடம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோயில் தெரு வழியாக இக்கோயிலைச் சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

The post நித்திய வாழ்வளிக்கும் நிசும்பசூதனி appeared first on Dinakaran.

Related Stories: