தெளிவு பெறுவோம்!

கல்யாண வீடுகள், கோயில் விசேஷங்கள் முதலான இடங்களில், வாழைமரங்களை நிறுத்தி, கட்டி வைப்பது ஏன்?

– பாபு, திருவண்ணாமலை.
மரம், செடிகள் எல்லாம் கரியமில வாயுவை வாங்கிக்கொண்டு, பிராணவாயுவைக் கொடுக்கும். பலர் கூடும் இடங்களில் வெளிப்படும் கரியமில வாயுவால் சுற்றுப்புறச் சூழ்நிலை கெட்டு, ஆரோக்கியம் கெடும். அதை நீக்கவே நாம் வெளியிடும் கரியமில வாயுவை ஏற்றுக்கொண்டு, நமக்குத் தேவையான பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடும் வாழை மரங்களை நிறுத்திக் கட்டி வைத்தார்கள். வாழை என்பதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. வாழை இலை, வாழைச் சருகு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பட்டை, வாழை(அடிக்)கிழங்கு என அனைத்தும் உபயோகப் படுவது வாழையில் மட்டுமே! புதுமணத் தம்பதிகள் அவ்வாறு வாழ வேண்டும் என ஆசி கூறும் விதமாகவே வாழை மரங்களை தார்பூ ஆகியவற்றுடன் நிறுத்திக்கட்டி வைத்தார்கள். மற்றொரு காரணம்; பலர் கூடும் இடங்களில் எதிர்பாரா விதமாகப் பாம்பு முதலானவைகளால் தீங்கு விளையலாம். அப்படிப்பட்ட நேரத்தில், வாழைப்பட்டையைப் பிழிந்து அதன் சாற்றைக் குடிக்கச் செய்தால், விஷ உபாதை நீங்கும். ஒரு வேளை அதற்குள் பற்கள் கிட்டிப் போய்விட்டால், பாதிக்கப்பட்டவரை வாழைப் பட்டைகளில் கிடத்தினால், கிட்டிப்போன பற்கள் தாமாகவே விலகும். வாழைப்பட்டைச் சாற்றைக் குடிக்கச் செய்யலாம். வாழையின் மருத்துவ குணங்களுக்காகவும் அவை, பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியில் சுற்றிவிட்டு வீட்டிற்குள் வந்ததும், உடனே நீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் ஏன்?

– சுபாஷ்,சேலம்.
வெளியில் உள்ள வெப்பம், காற்றழுத்தம் ஆகியவை அதிகமாக இருக்கும். அதில் இருந்து மீண்டு வீட்டிற்குள் நுழைந்ததும், வீட்டிற்குள் இருக்கும் குறைந்த காற்றழுத்தமும் குறைந்த வெப்பமும் பழக்கப்படச் சற்று நேரமாகும். அதாவது, வீட்டிற்குள் இருக்கும் வெப்ப தட்ப நிலையை நம் உடம்பு ஏற்க, சற்று நேரம் ஆகும். அதன் பின்பே நீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடம்பு பாதிப்படையாது. அதை விடுத்து, வெளியில் இருந்து வீட்டிற்குள் வந்ததும் நீர் குடிப்பது, அதுவும் குளிர் சாதனப் பெட்டியில் இருந்து நீர் எடுத்து அருந்துவது, உடல் பாதிப்படையச் செய்யும். அதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே, வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தால் உடனே தண்ணீர் குடிக்காதே என்றார்கள். விஞ்ஞான பூர்வமான உண்மை இது.

அஷ்ட லட்சுமிகள் என்று எட்டு விதமாகத் திருமகளை சொல்வது போல, சரஸ்வதி தேவிக்கு உண்டா?

– லட்சுமி, சென்னை.
உண்டு. அம்பிகைக்கு ஸ்ரீ சக்கரம் என்று சொல்கிறோம் அல்லவா? அதில் ஒன்பது சுற்றுக்கள் உள்ளன; அவற்றை ஆவரணங்கள் என்பார்கள். அவைகளின் உள் சுற்றின் நடுவில், பிந்து மண்டலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறார். மற்ற எட்டு சுற்றுகளிலும் வாக்குத் தேவதைகள் எனப்படும் எட்டு விதமான சரஸ்வதிகள் எழுந்தருளி இருக்கிறார்கள். அந்த எட்டு சரஸ்வதிகளின் திருநாமங்கள்: வசினி, காமேசுவரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேசுவரி, கௌலினி என்பவை.

பல ஆண்டுகளாகவே இந்து மதம் கூறும் மறுபிறவித் தத்துவத்தை மறுப்பவர்களுக்கு, அதைப்புரிய வைப்பது எப்படி?

– ஆர். உமாராமர், நெல்லை.
போன பிறவியில் தான் யாராக இருந்தேன்; எந்த ஊர்; அப்போது பெயர் என்ன; உறவினர்கள் யார் யார்? எனும் தகவல்களை எல்லாம் சொல்லி, ஆச்சரியப்படுத்திய நிகழ்ச்சிகள் பல. அவையெல்லாம் பத்திரிகைகளிலும் வெளியாயின. அதற்கும் மேலாக இக்கேள்விக்கு காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் கூறிய விளக்கத்தைப் பார்க்கலாம். (மிகச் சுருக்கமாக) அயல்நாட்டைச் சேர்ந்த வேற்றுமதத்தவர் ஒருவர், ஸ்ரீமகா சுவாமிகளைத் தரிசிக்க வந்தவர், இந்த மறுபிறவியைப் பற்றிக் கேட்டார். அவரை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி, அன்று பிறந்திருக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரச் சொன்னார். அவரும் அப்படியே செய்தார். வந்தவுடன் அவரிடம் ஸ்ரீ மகா சுவாமிகள், ‘‘ஒரு ஜீவன் பிறந்து, அதன்பின் தவறுகள் செய்து கஷ்டத்தை அனுபவிக்கிறது என்பது இருக்கட்டும். இப்போது பிறந்த இந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? ஒன்று தொட்டிலில்; ஒன்று தரையில்; ஒன்று அங்க ஹீனமாக; ஒன்று வியாதியுடன்; ஒன்று பிறந்த உடனேயே தாயைவிட்டுப் பிரிந்து, உடல் நிலை சரியில்லாததால் தனியாகஎன்று இவ்வளவு வேறுபாடுகள் ஏன்? ஒன்று, கருணை வடிவான தெய்வத்திற்குக் கருணை இல்லை என்பதாகும்; அல்லது, இந்த ஜீவன்கள் எல்லாம் முற்பிறவியில் செய்த நல்லவைகெட்டவைகளுக்கு ஏற்ப, இந்தப் பிறவியில் அதாவது மறுபிறவியில் இவ்வாறு பிறந்திருக்கின்றன என்பதாகும். தெய்வத்திற்குக் கருணை இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆகவே முற்பிறவியின் நன்மை தீமைகளின் விளைவே இது என்பதை ஏற்கத்தான் வேண்டும்’’ என்றார் ஸ்ரீமகா சுவாமிகள். (சுருக்கம்)

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

– அண்ணா. அன்பழகன். அந்தணப்பேட்டை.
சூரிய குலத்து அரசர் திரிசங்கு. அவர் உடம்போடு சொர்க்கம் போக விரும்பி, குல குருவான வசிஷ்டரிடம் சொல்லி அதற்கு உண்டானவைகளைச் செய்யச் சொன்னார். ‘‘அது சுலபமல்ல; நடக்காது’’ என அறிவுரை சொன்னார் வசிஷ்டர். அதனால் வசிஷ்டரிடம் கோபம் கொண்ட திரிசங்கு, அவரை அவமானப் படுத்தி சாபம் பெற்றார். அதன்பின் திரிசங்கு, விசுவாமித்திரரிடம் போய் நடந்ததைச் சொல்ல, அவர் தன் தவசக்தியால் திரிசங்குவை,உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்பினார். தேவர்களோ, ‘‘இது முறையற்ற செயல்” என்று சொல்லி, திரிசங்குவைக் கீழே தள்ளினார்கள்.திரிசங்கு அலறியபடியே கீழே விழ, அவரை அப்படியே ஆகாயத்தில் தடுத்து நிறுத்தி, ஒரு புது சொர்க்கத்தையே உருவாக்கினார் விசுவாமித்திரர். அது ‘திரிசங்கு சொர்க்கம்’ எனப்படுகிறது. மேலும் இல்லாமல் கீழும் இல்லாமல், அவாந்தரமாகஅந்தரத்தில், எந்த விதமான உதவியும் இல்லாமல் இருப்பது திரிசங்கு சொர்க்கம்.

 

The post தெளிவு பெறுவோம்! appeared first on Dinakaran.

Related Stories: