திருநள்ளார் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் 21.12.2024-சனி
சனி பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளனை சனி பகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
பானு ஸப்தமி 22.12.2024-ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு ஸப்தமி, இந்த நாள் சூரிய கிரகண நாளுக்குத் துல்லியமானது, அதாவது இன்றைய நாளில் நாம் செய்யும் பூஜைகள் மந்திர ஜபங்கள் ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக் கூடியவை. இன்று காலையில் புண்ணிய நதிகளில் ஸ்னானம் செய்வதும் சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் ஜபிப்பதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு தருவதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சகல ஜீவராசிகளுக்கும் படி அளந்த லீலை (அஷ்டமி பிரதட்சணம்)23.12.2024 திங்கள்
“கல்லினுள் சிறுதேரைக்கும் கருப்பையாடத்து உயிர்க்கும் புல்லுண வளித்துக் காக்கும் புனத்துழாய்க் கண்ணி யண்ணல்’’ என்று இறை வனைச் சொல்வார்கள். உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவுப் படியளக்கும் திருவிழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம், பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள்.
சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டாள் பார்வதிதேவி. சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.
இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்த போது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண் டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாள் – மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி
பிரதட்சணம் செய்யும் நாள்.
இன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.
இயற்பகை நாயனார் குரு பூஜை 23.12.2024 திங்கள்
இயற்பகையார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது. சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார். வணிக குலத்தினரான அவர், தம் வணிகத் திறத்தால் பெரும் செல்வராக விளங்கினார். சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் வள்ளலாய் வாழ்ந்து வந்தார். அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்த சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான், தூய திருநீறு அணிந்து வேதியர் கோலத்தில், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனார், அன்புடன் எதிர்கொண்டு, வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி, சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காத உம்மிடத் திலே, ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன்; அதனை நீர் தரு வதற்கு இணங்குவீரா?விருப்பமிருந்தால் சொல்வீர். இல்லை… வந்த வழியே செல்வேன்’’ எனக் கூறினார். அது கேட்ட இயற்பகையார், ‘‘என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் சிவனடியாரது உடைமை. இதில் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியது என்ன. என்னிடம் இருந்தால் தருவேன்’’ என்றார். அது கேட்ட வேதியர், ‘‘உன் மனைவியை விரும்பி வந்தேன்’’ எனச் சொன்னார்.
நாயனார் ‘‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற் சிறந்த மனைவியாரை நோக்கி, ‘‘பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’’ என்றார். அதுகேட்ட மனைவியார், மனம் கலங்கினார். பின் தெளிந்து, தன் கணவரை நோக்கி “என் கணவராகிய நீர் இட்ட கட்டளை இதுவாயின் நான் செய்வதன்றி எனக்கு வேறு உரிமை உளதோ?’’ என்று சொல்லி வணங்கினார்.
இச்செய்தியை அறிந்த மனைவியாரது சுற்றத்தாரும், நாயனாரது சுற்றத்தாரும், ‘‘இதென்ன அடாத செயல்’’ என வெகுண்டனர். மறைய வரை வளைத்துக் கொண்டனர். ‘‘நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டுப் போ’’ எனக்கூறினார். இயற்பகையார் போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். இல்லையேல் என் வாட்படைக்கு இலக்காக வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து, இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துண்டித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
அப்போது. மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை பெருங்குரலில் அழைத்தார். “இயற்பகை முனிவா ஓலம்; ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’’ என்றுகூறி விரைந்து வந்தார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பல முறை தொழுதார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறை வன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப் பராகிய இறைவர் ‘‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார். உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரின் குரு பூஜை இன்று.
சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை 24.12.2024 செவ்வாய்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு இன்று புஷ்பப் பாவாடை தரிசன நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். கன்னிப் பெண்கள், இந்தத் தரிசனத்தில் அம்பாளைக் கண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.
மானக்கஞ்சாரர் குருபூஜை 26.12.2024 வியாழன்
மானக்கஞ்சார நாயனார் கஞ்சாறு என்னும் ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்த இவர். பணிவுடையவர். தான் சிவபெருமானுக்கு ஆளாகும் பேறு பெற்ற சிவனடியார் எனத் தெரிந்து கொண்டவர். தான் ஈட்டிய பெரும் பொருளெல்லாம் சிவனடியார்க்குரியன எனும் நினைப்புடையவர். சிவனடியார் வேண்டுபவற்றை வேண்டுமுன் குறிப்பறிந்து கொடுப்பவர். அவருக்கு பிள்ளைப் பேறில்லாத குறை இருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிரார்த்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். அற்புதமாக சிவநெறி யோடு வளர்த்தார். அப்பெண் பேரழகுடன் வளர்ந்து திருமணப்பருவம் எய்தினார். இணையாக சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்னும் சிவநேசச் செல்வருக்கு, அச்செல்வ மகளை மணம் பேசினார். அவர்களும் மகிழ்ந்து மணத்திற்கு இசைந்தார். முகூர்த்தநாள் குறித்தனர். மணமகனாக கலிக்காமர் மண முரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.
அந்த நேரத்தில் சிவபெருமான் மாவிரதி வேடம் பூண்டு எழுந் தருளினார். மங்கல நாளில் தம் இல்லம் எழுந்தருளியது கண்டு மானக்கஞ்சாறர் மனம் மகிழ்ந்தார். மாவிரதியார் (சிவபெருமான்) ‘இங்கு நிகழும் மங்கலச் செயல் என்ன?’ என்று கேட்டார். ‘அடியேன் பெற்ற மகளது திருமணம்’ எனக் கஞ்சாறர் கூறினார். உடனே ‘மங்கலம் உண்டாகுக’ என மாவிரதையார் வாழ்த்தினார். கஞ்சாறனார் திரு மணக்கோலம் பூண்டிருந்த மகளை அழைத்து வந்து மாவிர தியாரை வணங்கச் செய்தார். திருவடியில் வீழ்ந்து வணங்கிய மணமகளது கூந்தலைப் பார்த்து மாவிரதியார் ‘இது நமது பஞ்ச வடிக்கு ஆகும்’ (மயிரினால் அகலமாகச் செய்யப்பட்டு மார்பில் பூணூலாகத் தரிக்கப்படும் வடம்) எனக் கூறினார். கஞ்சாறர் எதுவும் யோசிக்காமல் சிவனடியார் கேட்டார் என்பதற்காக தம் மகள் கூந்தலை அரிந்து அடியவரிடம் கொடுத்தார். அடுத்தகணம் அடியவர் மறைந்தார். வானிலே அம்மையப்பராய் தோன்றினார். ‘‘உமது மெய்யன்பை உலக மெல்லாம் விளங்கச் செய்தோம்’’ என அருளினார். இதற்குள் ஏயர் கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார். நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணா மற் போனதற்கு மனந்தளர்ந்தார். அங்கு விமர்சையாக கல்யாண வைபவம் நடந்தேறியது. மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை தினம் இன்று.
சர்வ ஏகாதசி 26.12.2024-வியாழன்
இன்று மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி. உத்பன்ன ஏகாதசி அல்லது உற்பத்தி ஏகாதசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி. இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு இந்த விரதம் தோன்றிய கதையை பற்றி எடுத்துரைக்கிறார். முரண் என்ற அசுரனை வீழ்த்த விஷ்ணுவிடமிருந்து தோன்றிய பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர். ஏகாதசி பெண் உற்பத்தியாகி முரண் என்ற பகையை வென்ற ஏகாதசி இன்றைய ஏகாதசி. அகப்பகை புறப்பகை என்ற இரண்டு பகைகளையும் வெல்லும் ஏகாதசியில் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வணங்க வேண்டும். சகல தீர்த்தத்திலும் நீராடிய புண்ணிய பலன் இன்றைய ஏகாதசி விரதத்தினால் கிடைக்கும்.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.