புதுடெல்லி: அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுவிவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? என கேட்டு சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திர பாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் ஆகியோருக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், “ அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர் மட்டுமின்றி, அனைத்து சமூகத்தினருக்கும் சமமான உரிமைகள் கிடைக்க செய்தவர். அவர் தேசத்தின் தலைவர் மட்டுமல்ல. தேசத்தின் ஆன்மா. ஆனால் அமித்ஷா அம்பேத்கரை பற்றி பேசியது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.
மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் பேச்சை பிரதமர் மோடியும் பகிரங்கமாக ஆதரித்துள்ளார். இது ஏற்புடையது கிடையாது. அம்பேத்கரை விரும்புபவர்கள் பாஜவை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். எனவே அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சு விவகாரத்தில் உங்களின்(சந்திர பாபு நாயுடு), நிதிஷ் குமாரின் பதில்களை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
The post அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் நிலைப்பாடு என்ன? கெஜ்ரிவால் கேள்வி appeared first on Dinakaran.