ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து போராட்டம்; தேனீக்கள் விரட்டியதால் காங். கட்சியினர் ஓட்டம்: ஒடிசாவில் பரபரப்பு

புவனேஸ்வர்: புவனேஸ்வரில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் சார்பில் நடந்த போராட்டத்தின் போது தேனீக்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி பிஷ்ணுபாதா சேத்தியை கைது செய்ய வேண்டும் என்று கோரி, புவனேஸ்வரில் ஒடிஷா மாநில காங்கிரஸ் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் சார்பில் போராட்டம் நடந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கிளம்பி வந்த தேனீக்கள் கூட்டம், போராட்டக்கார்களையும், காவல்துறையினரையும், பத்திரிகையாளர்களையும் விரட்டி விரட்டி கொட்டியது. அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். போலீஸ் அதிகாரிகள் கூட அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு, தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து கிளம்பியதால் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து தங்களது ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர்.

அப்போது அவர்கள், ‘ஐஏஎஸ் அதிகாரி பிஷ்ணுபாதா சேத்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களில் சிலர் ஐஏஎஸ் அதிகாரியின் இல்லத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புத் தடைகளை உடைக்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் நடந்தன. சிலர் கைது ெசய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து போராட்டம்; தேனீக்கள் விரட்டியதால் காங். கட்சியினர் ஓட்டம்: ஒடிசாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: