மகிளா அதாலத்திற்கு எதிர்ப்பு: கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக மகளிர் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் ஆம்ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருகிறது. டெல்லி முதல்வராக இருந்த ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், முறைகேடு வழக்கில் சிக்கியதால் அடிஷி முதல்வராக உள்ளார். முக்கிய எதிர்கட்சியான பாஜக, எப்படியும் டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் போராடி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு டெல்லி பாஜக மகிளா மோர்ச்சா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கெஜ்ரிவால் கூறிய கருத்துக்கு எதிராக இந்த போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய பெண்கள் தங்களது கையில் மெழுகுவர்த்தியை வைத்துக் கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது பாஜக எம்பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறுகையில், ‘பெண்கள் பாதுகாப்பு விசயத்தில் ஆம்ஆத்மி அரசு தோற்றுவிட்டது. ஆனால் மகிளா அதாலத்தை நடத்துவதன் மூலம் தனது தவறுகளை மறைக்க முடியாது. டெல்லி நிர்பயா சம்பவத்தின் போது சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். அதேபோல் கெஜ்ரிவாலும் கூறியுள்ளார். ஆம்ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பாரதி, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவரை தாக்கினார்.

அதனை கெஜ்ரிவால் மறந்துவிட்டாரா? மாநிலங்களவை ஆம்ஆத்மி எம்பி சுவாதி மாலிவால், கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரால் (பிபவ் குமார்) தாக்கப்பட்டார். அப்போது தனது செயலாளருக்கு ஆதரவாக கெஜ்ரிவால் நின்றார். பெண்கள் செயல்கள் பெண்களுக்கு எதிரானவை. கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் பிபவ் குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முன்னாள் முதல்வர் சோம்நாத் பாரதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? டெல்லியின் மகிளா ஆயோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்சி பெண்கள் ஏன் நியமிக்கப்படவில்லை?’ என்று கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார்.

The post மகிளா அதாலத்திற்கு எதிர்ப்பு: கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக மகளிர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: