நாதகவுக்கு டாடா காட்டும் மாவட்ட செயலாளர்கள்

கே.வி.குப்பம்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறி வருகின்றனர். இதில் சிலர் சீமானுக்கு எதிராக புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாதக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் மகேந்திரன், தொகுதி மகளிர் பாசறை செயலாளர் சாந்தி உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, கட்சி தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கட்சியில் இருந்து விலகியவர்கள் கூறுகையில், ‘நாம் தமிழர் கட்சியின் கீழ் மட்டத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து கடிதம் வாயிலாக தலைமைக்கு தெரிவித்து வருகிறோம். ஆனாலும், அந்த கடிதம் தலைமையை சென்றடையவில்லை. வேட்பாளர் நியமனத்தில் எங்களை அழைத்து ஆலோசனை செய்யவில்லை. தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. எளிய முறையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சி தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல், முன்பிருந்த கட்சி கட்டமைப்பு தற்போது இல்லை. இதனால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து விலகினோம்’ என்றனர்.

The post நாதகவுக்கு டாடா காட்டும் மாவட்ட செயலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: