அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேர் முழுமையாக நீக்கம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி

மயிலம்: அன்புமணி தரப்பை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முழுமையாக நீக்கப்படுவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகார மோதல் இருந்து வருகிறது. பாமக எம்எல்ஏக்கள் ஐந்து பேரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணி அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஜி.கே. மணி எம்எல்ஏ மற்றும் சேலம் அருள் எம்எல்ஏ ஆகிய இருவர் மட்டும் ராமதாஸ் அணியில் உள்ளனர்.

பாமகவில் எதிர் அணிகளை சேர்ந்தவர்களை ராமதாசும், அன்புமணியும் மாறிமாறி கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர். அந்தவகையில், கடந்த 20-7-2025 ல் டாக்டர் ராமதாஸ் உத்தரவின் பேரில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரையில் அவர்கள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ முறையான விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் தற்க்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் உத்தரவின் பேரில் பொதுசெயலாளர் முரளி சங்கர் இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் நகல்கள் தமிழக சட்டப்பேரவை தலைவர், உள்துறை செயலாளர், பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏ, பாமக சட்டமன்ற குழு கொறடா அருள் எம்எல்ஏ ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து டாக்டர் ராமதாஸ் சார்பில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: