குமரியில் கை ஓங்குமா..? 3 டைம் சப்ஜெக்ட் தப்புவார்களா கதர் எம்எல்ஏக்கள்

நாகர்கோவில்: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளான குளச்சல், கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதனை உறுதி செய்ய தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய எம்எல்ஏக்கள் குளச்சல் ஜே.ஜி. பிரின்ஸ், கிள்ளியூர் எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவர்). விளவங்கோடு தாரகை கத்பர்ட் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணியில் உள்ளது. விளவங்கோடு தொகுதியில் 2024 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட், குறுகிய காலத்திலேயே தொகுதிப் பணிகளில் கவனம் செலுத்தி மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார். 2026 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வை மேற்கொள்ள ஏ.ஐ.சி.சி 5 பேர் கொண்ட குழுவை ஏற்கனவே நியமித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படும் இந்த மூன்று தொகுதிகளிலும், தற்போதைய எம்எல்ஏக்கள் தங்களின் வெற்றி வாய்ப்பை முன்வைத்து, மீண்டும் போட்டியிடத் தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மூன்றுமுறை போட்டியிட்டதால் குளச்சல் தொகுதியில் புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குளச்சல் தொகுதியில் கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. இதனால் பிரின்ஸ் எம்எல்ஏவுக்கு இந்த முறை சீட் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட் ஆகியோர் அவர் தொடர்ந்து போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தங்கள் ஆதரவை கட்சியில் தெரிவித்து வருகின்றனர். அடுத்து தங்கள் தலைக்கு நேராக இந்த ‘மூன்று முறை சப்ஜெக்ட்’ கத்தி தொங்கலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் ‘மூன்று முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 2026 தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் டிசம்பர் 31ல் பெறப்பட்டுள்ளன. இதில் குளச்சல் எம்.எல்.ஏ ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் கிள்ளியூர் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். தற்போது விருப்ப மனு பெறுதல் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தேர்வில் ‘வெற்றி வாய்ப்பு’ மற்றும் தொகுதியில் உள்ள செல்வாக்கு ஆகியவற்றையே மேலிடம் முக்கிய அளவுகோலாகக் கொள்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தக் குறிப்பிட்ட தொகுதிகள் காங்கிரஸின் பலமான இடங்களாகக் கருதப்படுவதால், அனுபவம் வாய்ந்த பழைய முகங்களுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், இளைஞர்களுக்கும் புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சியினரிடையே எழுந்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு பல புதுமுகங்களும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இருப்பினும், தற்போதைய சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ராஜேஷ்குமார் போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் ெதாடர் வாய்ப்பை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளனர். எனவே, கட்சியின் இறுதி முடிவானது ஜனவரி-க்குப் பிறகு நடைபெறவுள்ள தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல்களுக்குப் பின்னரே தெரியவரும். 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே பலமுறை வென்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட முன்னுதாரணங்கள் இருப்பதால், 4வது வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான சூழல் தற்போதைக்குத் தெரியவில்லை.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, தனது அரசியல் வாழ்க்கையில் மொத்தம் 12 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து முறையும் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1970-ம் ஆண்டு முதல் 2023ல் அவர் மறையும் வரை, புதுப்பள்ளி தொகுதியிலிருந்து தொடர்ந்து 53 ஆண்டுகள் எம்.எல்.ஏவாகப் பணியாற்றினார். 2023ல் அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது மகன் சாண்டி உம்மன் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை முன்னுதாரணமாக கொண்டு குமரி காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்எல்ஏக்கள் தங்கள் சீட்டை உறுதி செய்து வருகின்றனர்.

Related Stories: