சீனிவாசபுரம் கட்டிட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: சென்னை-பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப் பகுதியில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-77 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு நீண்ட கால பயன்பாட்டால் கட்டிடம் சிதலமடைந்த நிலையில், மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை நிறைவேற்றும் வகையில் 20.1.2022 மற்றும் 9.3.2022 ஆகிய நாட்களில் குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது. மேலும், 8.7.2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு தலைமையிலும் 18.9.2022 அன்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலும் 9.9.2024 அன்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலும் மற்றும் 23.9.2024, 6.11.2024 மற்றும் 11.11.2024 ஆகிய நாட்களில் வாரிய நிர்வாக பொறியாளர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடந்தது. இந்த கூட்டங்களில் குடியிருப்பை காலி செய்வதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு 134வது பிளாக் 3ம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேடு இடிந்து விழுந்ததில் சையத் குலாப்புக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரது குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 கருணைத் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் சாலை மறியல்
உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அனைவருக்கும் அதே பகுதியில் மாற்று இடம் ஒதுக்க கோரி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதி மக்கள் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டினப்பாக்கம் சிக்னலில் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அடையாறு முதல் மெரினா வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், காலையில் தலைமை செயலகம் செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல்லில் சிக்கி தவித்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு பேச்சுவார்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post சீனிவாசபுரம் கட்டிட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: