திருவள்ளூர்: திருவள்ளூர் நேதாஜி சாலை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தியா (28). இவரது கணவர் ஜெகதீசன் (29). இவர் காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அதிகாலை ஜெகதீசன் கம்பெனியில் வேலை முடித்துவிட்டு தனது பைக்கில் திருவள்ளூர் – காக்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு மாடு குறுக்கே வந்தது. இதனால், மாட்டின் மீது மோதி நிலை தடுமாறி ஜெகதீசன் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மதியம் ஜெகதீசன் பரிதாபமக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீசனின் மனைவி சந்தியா திருவள்ளூர் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக்கில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி appeared first on Dinakaran.