மழைநீர் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்: வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை

திருவள்ளூர்: வேளாண்மைத் துறை இணை இயக்குநர் த.கலாதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவமழையின் காலத்தில், வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை உடனுக்குடன் வடிக்க வேண்டும். மழையால் மண்ணிலிருந்து அடித்து செல்லப்படும் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். பயிர்களில் நுண்னூட்டச் சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால், யூரியா மற்றும் நுண்ணூட்ட உரங்களை இலை வழியாக தெளிக்கவும்.

அசோஸ்பைரில்லம் ஏக்கருக்கு 500 மி.லி. மற்றும் பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு 500 மி.லி. போன்ற திய உயிர் உரங்களை எருவுடன் கலந்து நேரடியாக வயலில் இட வேண்டும். மழை காலங்களில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் குறைவாகவும், இலைப்புள்ளி, பாக்டீரியா இலைகருகல் நோய், குலை நோய் அதிகமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பூச்சி நோய் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் ஏற்பட்டால் வேப்ப எண்ணெய் 3 லிட்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். அறுவடை நிலையில், தூர் கட்டும் நிலையில் உள்ள நெல் வயல்களில் பருவ மழையினால் தேங்கும் மழைநீரினை முழுவதுமாக வடிக்க வேண்டும்.

நெல் வயல்களில் உள்ள மழைநீரினை வடித்த பிறகு, மேலுரமாக ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ இடுவதன் மூலம் மழையினால் பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யலாம். பருவமழையினால் பாதிப்பு அடையும் இளம்பயிர் மற்றும் தூர் கட்டும் பயிர்களை பாதுகாப்பதற்கு ஏக்கருக்கு 1 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் ஒரு இரவு வைத்து மறுநாள் மேல் உள்ள தெளிந்த நீரினை மழை நின்றவுடன் தெளிக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவித்து ஆலோசனைகள் பெற சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post மழைநீர் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்: வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: