கால்வாய், ஆற்றில் இருந்து வாலிபர், முதியவர் சடலம் மீட்பு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே ராமஞ்சேரி ஈன்றபேட்டை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பத்து பாளையம் பகுதியைச் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமய்யா (65 ) என்பவர் நேற்று முன்தினம் மாலை ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து தேடினர். நேற்று அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று 2வது நாளாக தேடுதல் வேட்டை தொடங்கியது.

ஆற்றில் புதியவர் அடித்துச் செல்லப்பட்ட பகுதிக்கு சற்று தொலைவில் அவரது சடலம் மிதப்பதாக கிராம மக்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு கிராமத்தில் பூந்தமல்லி – அரக்கோணம் செல்லும் சாலையில் வரவு கால்வாய் பகுதி உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக நேற்றுமுன்தினம் கிராம நிர்வாக அலுவலர் பரணிதரனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து, கிராம அலுவலர் மப்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அடையாளம் தெரியாத 35 மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை பொது மக்கள் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடி போதையில் வாலிபர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கால்வாய், ஆற்றில் இருந்து வாலிபர், முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: