திருச்செந்தூர் கடலில் கிடந்த கல்வெட்டுகள்: தொல்லியல் துறையினர் ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் கிடந்த கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். இதேபோல் கடலோரத்தில் தீர்த்தக்கிணறுகளை புவியியல் துறை ஆய்வு செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமே கடற்கரையோரம் உள்ளது. இங்கு புனித நீராடும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு உள்ளிட்ட 24 தீர்த்தக்கிணறுகள் உள்ளன. இவற்றில் நாழிக்கிணறும், அதனருகில் கடற்கரையில் செல்வ தீர்த்தக்கிணறு, மற்றுமொரு தீர்த்தக்கிணறு, வள்ளிக்குகை அருகில் மற்றும் கடற்கரையோரத்திலும், கடலுக்குள்ளேயும் தீர்த்தக்கிணறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடந்த 4 தினங்களாக கடல் அவ்வப்போது உள்வாங்கியது.

இதனால் உள்வாங்கிய கடலில் பாசி படர்ந்த பாறைகளுக்கு இடையே சுமார் 7 அடி நீளம் கொண்ட இரு கருங்கற்களால் ஆன கல்வெட்டுகள் கிடந்துள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் சுதாகர், உதவி பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வந்து பார்வையிட்டனர். அப்போது கல்வெட்டில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் மாதா தீர்த்தக்கிணறு, பிதா தீர்த்தக்கிணறு என்றும், அதில் நீராடினால் சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.கடலில் கிடந்த கல்வெட்டை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றதோடு இதுகுறித்து புவியியல் துறையினர் ஆய்வு செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘‘தீர்த்தக் கிணறுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’
தீர்த்த கிணறுகள் குறித்து பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக அந்தந்த கிணறுகள் அருகே இதுபோன்ற கல்வெட்டுகள் கொண்ட கற்கள் நடப்பட்டிருக்கலாம். அவை நாளடைவில் காற்று மற்றும் மழையின் போது சரிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடற்கரை ஓரத்தில் இப்படி நிறைய நல்ல தண்ணீர் கிணறுகள் இருந்துள்ளது. எனவே இந்தக் கிணறுகளைச் சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவசியம் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.திருச்செந்தூர் வள்ளி குகைப்பகுதியில் இருந்து கடற்கரை பகுதியில் உள்ள சந்தோஷ மண்டபம் வரை 24 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது. குறிப்பாக லட்சுமி தீர்த்தம், துர்கா தீர்த்தம், நாழிக்கிணறு தீர்த்தம், செல்வ தீர்த்தம், மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம் என பல்வேறு தீர்த்தங்கள் இருந்துள்ளன. அவை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு விட்டது. தற்போது நாழிக்கிணறு தீர்த்தம் மற்றும் செல்வ தீர்த்தம் மட்டும்தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நாழிக்கிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். செல்வ தீர்த்தத்தில் முருகனுக்கு அபிஷேக நீர் கொண்டு செல்லப்பட்டது. அது தற்போது மோட்டார் மூலம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

The post திருச்செந்தூர் கடலில் கிடந்த கல்வெட்டுகள்: தொல்லியல் துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: