×

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு; மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்

புதுடெல்லி: அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் இதே சம்பவத்தை கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரிகளுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை அலுவல்கள் முடங்கியுள்ளன. நேற்று திமுக எம்பி டி.ஆர்.பாலு, மக்களவை சபாநாயகருக்கு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார். அதில், ‘பெஞ்சல்’ புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்தன. இந்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்து, சேத மதிப்பீட்டை கணக்கிட ஒன்றிய குழுவை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

மேலும் திமுக எம்பி கனிமொழியும், பெஞ்சல் புயல் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்துள்ளார். இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குவது குறித்தும், ஒன்றிய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க கோரிக்கை விடுத்திருந்தார். மதிமுக எம்.பி. துரை வைகோவும், இதே கோரிக்கையை வலியுறுத்தி நோட்டீஸ் அளித்தார். இவை தொடர்பாக அவையில் நடந்த அமளியால் அவை முடங்கியது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று காலை பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க ஒ்ன்றிய அரசு மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பின. இதில், ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவை, மாநிலங்களவை இன்று காலை கூடியது. அவை கூடிய சிறுது நேரத்திலேயே அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் மற்றும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. அப்போது, ‘உத்தரபிரதேச மாநிலம் சம்பல் கலவரம் சம்பவம் குறித்து விவாதம் தேவை என்று அகிலேஷ் யாதவ் தொடர்ந்து கூறி வருகிறார். அந்த விவாகரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் கோரினார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் புதுகை அப்துல்லா ஆகியோரும் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு விவரங்களை விவரித்தனர். மேலும் அதானி ஊழல் முறைகேடு, உ.பி சம்பல் மசூதி விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மேலும் 100 நாட்கள் வேலை திட்டத்துக்கு பாஜ ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது, பாஜ அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.

The post அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு; மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Refusal ,Manipur ,Lok Sabha ,India ,New Delhi ,Adani ,Manipur riots ,Adani Green Energy ,Dinakaran ,
× RELATED மக்களவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!