புதுடெல்லி: பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் டிச.31க்குள் ஒரு அதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுக்கள் அனைத்து அமைச்சகங்களிலும் துறைகளிலும் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் காலக்கெடுவுடன் கூடிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று 2023 மே மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்த உத்தரவை அமல்படுத்தியதை கண்காணிப்பது தொடர்பான மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வர்சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நாடு முழுவதும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் 2013 சட்டம் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும். எனவே டிசம்பர் 31ம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
2025 ஜனவரி 31 க்குள் உள்ளூர் புகார் குழுவை அமைத்து தாலுகா மட்டங்களில் நோடல் அதிகாரிகளை நியமிக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் பொது மற்றும் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்து கலெக்டர்கள், துணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2025 மார்ச் 31க்குள் இந்த புகார்கள் மற்றும் தண்டனைகள் பற்றிய அறிக்கையை தலைமைச் செயலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் அனைத்து மாவட்டங்களிலும் டிச.31க்குள் அதிகாரி நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.