×

கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்

நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக் கணக்கான ஆலயங்களில் கார்த்திகை தீபப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில் கார்த்திகை மாதம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்தகைய ஆலயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம். பாருங்கள்!ஸ்ரீ குருவாயூரப்பன் மகிமையை உலக மக்களுக்குப் பறை சாற்றிய பெருமையில் பெருமளவு ‘நாராயணத்தைக்’ சாரும். அந்தி பக்திக் காவியத்தை இயற்றியவர் அருட் கவிநாராயணபட்டத்திர் மேப்பத்தூர் நாராயணபட்டத்திரி அவர் அவதார புருஷராகவே கருதப் படுகிறார். இவர் 400- ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர். இவரது காலம் 1560-லிருந்து 1666 வரை. இவரை ராமாவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் அவதாரம் செய்த சாட்சாத் ஆதிசேஷனே ஆவார் என்று சொல்லப்படுகிறது. பூர்ணாவதாரமாகக் கருதப்படும். கிருஷ்ணாவதார லீலைகளை நெஞ்சுருக, மெய்சிலிர்க்க வர்ணித்துள்ளார் நாராயண பட்டத்திரி.கார்த்திகை மாதம் 28-ம் தேதி நாராயணீயம் காவியத்தைப் பூர்த்தி செய்து ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளில் சமர்பித்தாராம். அந்த நாள் ‘நாராயணீய தினமாகக் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. பட்டத்திரி 12-ஆண்டுகள் குருவாயூரப்பன் ஆலயத்திலேயே வாழ்ந்தார். 12-ஆண்டுகள் ஆலயத்தில் நாராயணீயம் பக்தி மழையாகப் பெய்தது. ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் அவர் நாராயணீயம் காவியத்தைப் பாடக் கேட்டு, பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போனார்கள்.

நாராயணீயம் இன்றும் பக்தர்களால் பாடப்பட்டுவருகிறது. குருவாயூர்ப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் 28-ம் நாள். பட்டத்திரி நாராயணீயம் பாடி நிறைவேற்றிய அந்த நாளை பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் பிரார்த்தித்துக் கொண்டபடி பண்டிதர்களை வைத்து நாராயணீயம் பாராயணம் செய்வது நாள் தோறும் நடைபெறுகிறது.கார்த்திகை மாதம் அண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா 10-நாட்கள் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்திருவிழா எல்லைத் தெய்வங்களாகக் கருதப்படும் ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ பிடாரி, ஸ்ரீ விநாயகர் ஆகியோர்களுக்குத் தான் முதல்மூன்று நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் ஸ்ரீ துர்க்கைக்குத் தான் முதல் வழிபாடு!கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. முதலாவதாக அருள்மிகு துர்க்கையம்மை வழிபாடு நடைபெறுகிறது. இவ்விழாவில் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இப்பெரும் கார்த்திகை தீபப் பெருவிழா வினைச் சிறப்பாகவும், நன்முறையிலும் ஆகம விதிப்படி ஆன்மிக நோக்கோடு எல்லா மக்களையும் காத்து அருள்பாலிக்க வேண்டும் என்ற உயர் நோக்கோடும் அனைத்து இடையூறுகளையும் நீக்கி அருள்பாலிக்க வேண்டி அண்ணாமலையில் நடைபெறும் முதல் திருவிழாவாகும்.

அன்று மாலையில் துர்க்கையின் உற்சவ அம்பிகை அலங்கார சொரூபமாக காமதேனு வாகனத்தில் அமர்ந்து, மேளதாளத்துடன் மாடி வீதி வலம் வருகிறாள். அன்பர்கள் இறைவியை வணங்கி மண்டகப்படி என்ற முறையில் அம்பிகைக்கு மரியாதை செய்வித்து இறைவியின் அருளைப் பெறுகிறார்கள். ஆக கார்த்திகை தீப பெரு விழாவிற்கு முதல் மூன்று நாள் துவக்க விழாவில் முதல் நாளாக நமக்கு அருள்பாலித்து திருவிழா சிறப்பாக நடைபெற நமக்கு ஊக்கத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள்கிறாள் துர்க்கை.இரண்டாம் நாள் அதே போன்று பிடாரி அம்பிகை புலி வாகனத்தில் மாட வீதிவலம் வந்து அருள்கிறாள். மூன்றாம் நாள் அதே போன்று விநாயகப் பெருமான் சண்டிகேசுவரருடன் மாட வீதிவலம் வந்து அருள்கிறார்.ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவில் புஷ்கர் நகரம் உள்ளது. நாக பர்வதம் என்னும் மலையின் பிரம்மாண்டமான பள்ளத்தாக்கில் தான் அரை வட்ட வடிவில் புஷ்கர் ஏரி அமைந்துள்ளது. இந்த புஷ்கர தீர்த்தம் மிகவும் புகழ் பெற்றது. புரி, துவாரகா, பத்ரிநாத், ராமேஸ்வரம் முதலிய பிரபல தல யாத்திரைகளின் பயன் இந்தப் புஷ்கரத் தீர்த்தத்தில் நீராடினால் தான் முழுமையாகப் பெறலாம் என்பர். வட இந்தியப் பஞ்சாங்கத்தின் படி ‘கார்த்திகை மாதம்’ முழுவதும் இங்கே நீராடுவது மிக மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கே கார்த்திகை பௌர்ணமி அன்று ஒரு பெருந்திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அன்று புஷ்கர் தீர்த்தத்தில் நீராடி பிரம்மா, சாவித்திரி தேவி, காயத்திரி தேவி இவர்களைக் கண்டு தரிசிக்க, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கணக்கற்ற பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். இந்தப் புனிதமான ஏரிக்கரையில் புரியும் பித்ரு கடன், ஹோமம், ஜபம், தவம் இவைகளைச் செய்வதால் பன்மடங்கு பலன் கிடைக்கும் என்று ‘‘விஷ்ணு தர்ம சூத்ரம்’’ என்ற நூல் கூறுகிறது.

சரித்திரப் புகழ் பெற்ற உஜ்ஜயினி மாநகரின் அதிபதியாக மகா காலேஸ்வரர் அருள்பாலிக்கிறார். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் இவரும் ஒருவர். இங்கு இவர் இரண்டு அடி உயரமுள்ள ஜோதிர் லிங்கமாக மகாகாலேஸ்வரர் என்ற பெயர் தாங்கி ‘மேவா அலங்கார்’ எனும் அலங்கார வடிவில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார் வட இந்தியப் பஞ்சாங்கப்படி’ கார்த்திகை மாதம்’ கிருஷ்ணபட்ச சதுர்த்தசி காலையில் மகாகாலேஸ்வரின் சிவ லிங்கத்திருமேனியில் ‘பாங்’ எனும் அபினைக் கரைத்து, சந்தனக் காப்பு போல் சார்த்துகிறார்கள். பெரும் சிறப்புக்குரிய இந்தக் காப்பு தரிசனத்தை அன்று காலை பத்து மணி வரை பார்க்கலாம். பிறகு லிங்கத்துக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை தான் அபின் காப்பும், வெந்நீர் அபிஷேகமும் நடைபெறும். அன்றைய தினம் இங்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசனம் பெறுகிறார்கள்! இந்த தரிசனம் காண்பதைப் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.
கேரள மாநிலத்தில் உள்ள திருப்புணித்துறை புகழ் பெற்ற திருத்தலம். அந்தக் காலத்து கொச்சி ராஜ்யத்தின் தலை நகராக இருந்த ஊர். இங்கு கொச்சி ராஜ வம்சத்தின் குலதெய்வமாகவும், காக்கும் தேவதையாகும் கருதப்படும் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ண மூர்த்தி திருக்கோயில் கொண்டிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ‘‘திருக்கோட்டைப் புறப்பாடு’’ என்ற பெயரில் ஒரு திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு சமயம் கார்த்திகை மாத உற்சவத்தின் நான்காம் நாளான ‘கேட்டை’ நட்சத்திரத்தன்று, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வில்வமங்கள சுவாமியார் இந்தக் கோயிலுக்கு வந்த போது கருவறையில் ‘சுவாமி’யைக் காணவில்லையாம். அப்போது கோயில் வளாகத்தில் 15-யானைகளுடன் சீவேலி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கு தென்பிராகாரத்திற்கு வந்த சுவாமியாரின் கண்களுக்கு பாலகிருஷ்ணன் ஒரு யானை மீதிருந்து மற்றொரு யானைக்குத் தாவித்தாவி விளையாடிக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது. இந்த அற்புதக் காட்சியைக் கண்டு ரசித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்த நாளன்று வில்வமங்கல சுவாமியாருக்கு கண்ணபிரான் தரிசனம் கிடைத்ததால் அந்த நாள் ‘‘திருக்கேட்டைப் புறப்பாடு’’ என்று ஒரு திருவிழாவாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.கேரள மாநிலத்தில் உள்ள திருப்ரையார் ராமன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மூலவராக ராமபிரான் சதுர்புஜங்களுடன் சங்கு, சக்கரம், கோதண்டம், அட்சமாலை முதலியவை ஏந்திய திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி பூதேவியுடன் எழுந்தருளியிருக்கிறார். இத்திருத்தலத்தில் ‘‘கார்த்திகை ஏகாதசி’’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை ஏகாதசிக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்தே தினமும் ஆலயம் பூராவும் நிறைய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படும். அதற்கு ‘‘நிறை மாலை’’ என்று பெயர். அச்சமயத்தில் பட்ச தீபமும் ஏற்றப்படும். ஏகாதசிக்கு ஒரு வாரம் முன் பிருந்தே சங்கீதக் கச்சேரிகளும், கதா காலட்ச..பங்களும், கதகளி போன்ற பல நாட்டியங்களும் நடைபெறும். அன்று 11-யானைகள் அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் பெரிய யானையின் மீது சுவாமி எழுந்தருளி பல வகை வாத்தியங்களுடன் ஆலயத்தைச் சுற்றி பவனி வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். கார்த்திகை ஏகாதசியன்று விடியற்காலை ஸ்ரீ ராமபிரானைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.இயற்கை எழில் நிறைந்த கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் சுக்ல ஏகாதசி என்று ‘குருவாயூர் ஏகாதசி’ என்ற பெயரில் பெருந்திருவிழா நடைபெறுகிறது.

ஏகாதசிக்குப் பதினெட்டு நாட்களுக்குமுன்பே உற்சவம் தொடங்கி விடுகிறது. அதாவது லட்ச தீபம் போல் எல்லா விளக்குகளும் தீப ஸ்தம்பங்களும் ஏற்றப்படுகின்றன. பிராகாரத்தில், பல்வேறு வாத்தியங்களின் நாத வெள்ளத்தில் யானைகளின் ஊர்வலம் மிதந்து செல்கிறது. ஏகாதசி திருநாளன்று நாரத மகரிஷியுடன் வந்த ஆதிசங்கரர் குருவாயூர் கோயிலில் நாற்பத்தோரு நாட்கள் தங்கிப் பூஜை முறைகளையெல்லாம் வகுத்துத் தந்து விட்டுச் சென்றார். ஏகாதசி திருநாளன்று தான் கிருஷ்ணபரமாத்மா அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்து விசுவரூபம் காட்டி யருளினார். ஏகாதசி அன்று தான் கிருஷ்ணன் இந்திரனின் சீற்றத்திலிருந்து கோகுலவாசிகளைக் காப்பாற்ற கோவர்த்தனகிரியைக் குடையாய்த் தூக்கி திருநடனம் புரிந்தான். இத்தகைய காரணங்களால் குருவாயூரில் ஏகாதசி திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.எழில் மிகு கேரள மாநிலத்தில் உள்ள பல திருத்தலங்களில் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து மார்கழி மாதம் இறுதி வரை ‘‘மண்டலகாலம்’’ என்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த நாட்களையெல்லாம் மக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். முக்கியமாக, ஸ்ரீ ஐயப்பனுக்கு மண்டல காலத்தில் பூஜைகளும், பஜனைகளும், விளக்குகளும், சாஸ்தா ப்ரீதி விழாக்களும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன. அந்த வகையில் பாலக்காடுக்கு அருகில் உள்ள நூறணி கிராமத்தில் நடைபெறும் ‘‘சாஸ்தா ப்ரீதி’’ மிகவும் புகழ் வாய்ந்ததாகும். மலையாளத்தில் உள்ள சாஸ்தா துதிப் பாடல்களில் ‘‘நூறணி செல்லப்பிள்ளை’’ என்று குறிப்பிடப்படும். அளவுக்கு அவ்வூர் சாஸ்தா புகழ் பெற்று விளங்குகிறார். இந்த நூறணி சாஸ்தா ப்ரீதி உற்சவம் சுமார் ஏழு வாரங்கள் நடைபெறுகிறது.

அதாவது கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி மார்கழி மாதம் மூன்றாவது வாரம் வரை. மண்டல காலம் முழுவதும், தினம் காலையில் தெற்கே இருக்கும் தர்ம சாஸ்தாவுக்கு வடபுறம் இருக்கும் சுந்தரராஜப் பெருமாளுக்கும் அபிஷேகம், அலங்கார ஆராதனைகளுடன், பக்தரின் உபயமாக வேதபாராயணம் நடைபெறுகிறது.திருச்செந்தூர் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கற்கு வேல் ஐயனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு கிழக்குப் பார்த்த சந்நிதியில் பூரணம், பொற்கமலம் தேவியருடன் அமர்ந்திருக்கிறார் கற்குவேல் ஐயனார். இங்கு கார்த்திகையில் விழாமயம் தான். கார்த்திகையின் கடைசி மூன்று நாட்கள் இங்கு ‘கள்ளர் வெட்டு விழா’ எனும் திருவிழா திருலோகப்படுகிறது. இந்தத் திருவிழாவின் போது பல்லாயிக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். கார்த்திகை 28-ல் பச்சரிசி மாவினால் ஐயனாருக்கும் தேவியருக்கும் அலங்காரம் செய்து சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.

அடுத்த நாள் சந்தன அலங்காரத்துடன் சிறப்புப் பூஜை நிறைவு நாளானால் கார்த்திகை 30ல் தாமிரபரணி ஆற்றிலிருந்து 11-கலசங்களிலிருந்து தீர்த்து எடுத்து வந்து ஐயனாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அன்று இரவு மேடையில் ஐயனார் வரலாற்றை வில்லுப்பாட்டாக இசைக்கிறார்கள்.கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில், சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் அன்று மட்டும் கண் திறந்து சேவை சாதிப்பதாக ஐதீகம். எனவே கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் சோளிங்கர் வருகிறார்கள். அச்சமயத்தில் பகவான் கண் திறந்து காட்சி கொடுத்து, பக்தர்களின் கவலைகள், பாவங்கள் ஆகியவற்றை நீக்கி விடுவார் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இது பிரார்த்தனை மற்றும் பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது. பக்தர்கள் இங்கு வந்து முடி காணிக்கை கொடுக்கும் பிரார்த்தனையும் உண்டு!

The post கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள் appeared first on Dinakaran.

Tags : Kartika ,Karthikai ,Deepab Peruvizha ,Sri Guruvayurappan ,Karthika ,
× RELATED கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினம்...