×

ஞானத்தின் சிகரமான அம்பிகை

சென்ற இதழின் தொடர்ச்சி…

ஸுதா ஸாகர மத்யஸ்தா

மலையும் கடலும் சேருமா என்கிற கேள்வி வரும். நாம் பார்க்கப்போகிற தலத்தில் மலையும் கடலும் சேர்ந்தே இருக்கிறது. எப்படி இருக்கிறதெனில், கடலினுடைய மட்டம் இருக்கிறதல்லவா… இதிலிருந்து கீழ் நோக்கி கடலுக்கு உள்ளே போக வேண்டும். கடலுக்கு கீழே ஒரு மலையிருக்கிறது. அது சாதாரண மலை அல்ல. அது சந்தனத்தாலும் பவழத்தாலும் ஆன ஒரு மலை. அந்த மலையினுடைய உச்சியில் ஒரு மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இப்போது நாம் அந்த க்ஷேத்ரத்திற்குச் சென்றால் நாம் முதலில் கடலைப் பார்த்துவிட்டு, அந்த தலத்திற்கு கீழே இறங்கிப் போய் அந்த மூர்த்தியை தரிசனம் பண்ணுவோம். அந்த மூர்த்தி எங்கிருக்கிறார் எனில், கடலுக்கு கீழ் உள்ள மலையினுடைய உச்சியில் இருக்கிறார். ஆனால், அது நமக்கு வெளியே தெரியாது. மூர்த்தியை பார்த்துவிட்டு வந்து விடுவோம். ஆனால், geographical ஆக இப்படித்தான் அமைந்திருக்கிறது. அது எந்த க்ஷேத்ரம் என்று கேட்டால், அதுதான் திருச்செந்தூர்.
திருச்செந்தூரில் சுப்ரமணியசுவாமி மூல ஸ்தானம் என்பது மலை உச்சி. அறுபடை வீட்டில் திருப்பரங்குன்றத்தில் மலையின் அடிவாரத்திலும், பழனியில் அடிவாரமான திருவாவினங்குடியிலும் மலைக்கு மேலேயும் இருக்கிறார். திருத்தணியில் மலைக்கு மேலே இருக்கிறார். இப்போது திருச்செந்தூரில் மட்டும் மலையே இல்லையே கடலுக்கு பக்கத்தில்தான் என்று பார்க்கிறோம். ஆனால், திருச்செந்தூரிலும் மலைக்கு மேலேதான் இருக்கிறார். எப்படி இருக்கிறாரெனில், கடலுக்கு அடியில் ஒரு மலை இருக்கிறது.

அந்த மலைக்கு மேலே இருக்கிறார். அந்த மலைக்கு கந்தமாதன பர்வதம் என்று பெயர். அந்த கந்தமாதனபர்வதத்தின் உச்சியில்தான் இன்றைக்கு நாம் பார்க்கக் கூடிய மூலஸ்தானத்தின் உச்சியில்தான் சுப்ரமணியசுவாமி இருக்கிறார். அதனால்தான், நாம் மூலஸ்தானத்திற்கு பின்னால் பஞ்ச லிங்கங்கள் தரிசனம் செய்யும்போது, அந்த மலையினுடைய முகடு இருக்கும். அந்த மலையை குடைந்துதான் இப்போது இருக்கும் கோயிலையே கட்டியிருக்கிறார்கள். இப்போது கடலும் மலையும் சேர்ந்து விட்டதா. அப்படி ப் பார்க்கும்போது அந்தர்முகமாக ஏன் ஸுமேரு ஸ்ருங்கமும்… ஸுதா சாகரமும் ஏன் சேரமுடியாது. இங்கு விஷயம் என்னவெனில், ஸுமேரு மத்யம் என்கிற ஞானத்தால் காண்பிக்கக் கூடிய பொருளும், ஸுதா சாகரம் என்கிற ஆழமான பக்தியினால் காண்பித்துக் கொடுக்கக் கூடிய பொருளும் ஒன்றுதான். ஞான மார்க்கமா… பக்திமார்க்கமா… என்கிற கேள்வியே இங்கு எழ வேண்டியதில்லை. கதம்பவனத்தில் அம்பாள் மஹா ஷியாமளாவாக இருக்கிறாள் என்றபோது, ஹ்ருதய ஸ்தானத்தைச் சொன்னோம். மஹாபத்மாடவியில் அம்பாள் மகாவாராஹியாக இருக்கிறாள் என்றபோது ஆக்ஞா சக்ரத்தைச் சொன்னோம். இப்போது ஸுதா ஸாகரத்தில் அம்பாள் மகாதிரிபுரசுந்தரியாக இருக்கிறாள் என்று சொல்லும்போது, நம்முடைய சகஸ்ராரத்தைச் சொல்கிறோம்.
ஏனெனில், சகஸ்ராரத்தில்தான் அம்ருதப் பிரவாஹம் நடக்கும்.

அப்போது, ஹ்ருதயம் என்கிற அநாகதத்தைச் சொல்லி, ஆக்ஞாவைச் சொல்லி, இப்போது மகாதிரிபுர சுந்தரியாக ஸுதா சாகரத்தின் மத்தியில் மணித்வீபத்தில் இருக்கிறாள் என்று சொல்லும்போது நம்முடைய சஹஸ்ராரத்தைச் சொல்கிறோம். இது யோக மார்க்கம். இப்போது ஸுதா ஸாகரத்தையும்… நம்முடைய சரீரத்தில் இருக்கக்கூடிய ஸுதா சாகரத்மான சகஸ்ராரத்தையும், இந்த இரண்டையும் இணைத்து வைக்கக்கூடிய க்ஷேத்ரம் இருக்க வேண்டுமல்லவா… அதுதான் காஞ்சிபுரம். இந்த காஞ்சிபுரம் என்கிற ஸுதா ஸாகரத்தின் மத்யத்தில் அம்பாள் மகாதிரிபுரசுந்தரியாக காமாட்சியாக இருக்கிறாள். இப்படி இருக்கும்போது நமக்கு பிரத்யட்சமான ஆதாரம் என்னவெனில், ஸுமேரு மத்யத்தில் மூன்று ஸ்ருங்கங் களாக… மூன்று உச்சிகளாக… பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் இருக்கிறார்கள் என்று பார்த்தோமல்லவா. இப்போது இங்கு காஞ்சிபுரம் காமாட்சி ஸுதா ஸாகரத்தின் மத்தியில் இருக்கும்போது, அம்பாளைச் சுற்றிலும் பிரம்ம லோகம், விஷ்ணு லோகம் ருத்ர லோகம் ஆகிய மூன்றும் அம்பிகையை பிரதட்சணம் செய்து கொண்டேயிருக்கும். இப்போது காஞ்சிபுரத்தில் பார்த்தோமானால், அம்பாள் மத்யத்தில் இருக்கிறாள். ஸுதா சாகரத்தில் மூன்று லோகங்கள் எப்படி சுற்றிச்சுற்றி வருமோ அதேபோல காஞ்சியில் சிவா ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பிரம்ம காஞ்சி, இன்னொரு பக்கம் ஏகாம்பரநாதர் என்று சொல்லக் கூடிய சிவ காஞ்சி, இன்னொரு பக்கம் வரதராஜர் என்று சொல்லக்கூடிய விஷ்ணு காஞ்சி. இந்த பூலோகத்தில் காஞ்சிபுரம் என்று சொல்லக்கூடிய ஸுதா ஸாகரத்தில் மத்தியில் அம்பாள் இருக்கிறாள்.

பிரம்ம காஞ்சி என்பது பிரம்மா யாகம் செய்த இடம். இங்கு பிரம்மபுரீஸ்வரராக இருக்கிறார். இது பிரம்மலோகமாகவும்… ஏகாம்பரநாதர் சந்நதி ருத்ரலோகமாகவும்… ஏனெனில், அங்கு இருக்கக்கூடிய விமானத்திற்கே ருத்ரகோடி விமானம் என்று பெயர். அதேமாதிரி, வரதராஜ பெருமாள் விஷ்ணுலோகமாகவும் இருந்து, பிரம்ம விஷ்ணு ருத்திரர்களால் சேவிக்கப்படும்படியாக காமாட்சி அம்பிகை இங்கு எழுந்தருளியிருக்கிறாள். அதனால், காஞ்சிபுரம் நமக்கு பிரத்யட்ச ஸுதா ஸாகரம். பூலோகத்தில் இருக்கக் கூடிய ஸுதா ஸாகரம். அதில் மூன்று லோகங்கள் எப்படி சுற்றுகிறதோ அதுபோல நடுவில் இருக்கக் கூடியது காஞ்சிபுரம் காமகோடி. காமகோடியைச் சுற்றி ஒருபக்கம் பிரம்ம காஞ்சி, இன்னொரு பக்கம் விஷ்ணு காஞ்சி, இன்னொரு பக்கம் சிவ காஞ்சி. இதில் விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் பிரம்ம காஞ்சி என்பதை மகா பெரியவா காண்பித்துக் கொடுக்கிறார். தேனம்பாக்கம் சிவா ஸ்தானத்தில் மகா பெரியவர் இருக்கும்போது, இந்த இடமானது பிரம்மா யாகம் செய்த இடம். இதற்கு பிரம்ம காஞ்சி என்று பெயர். அங்கு வந்து சுவாமி பிரம்மபுரீஸ்வரராக இருக்கிறார். பிரம்மா யாகம் செய்த இடத்தில் இப்போது ஒரு திருக்குளம் இருக்கிறது. அந்த குளம் இருக்கிற இடத்தில் பிரம்மா யாகம் செய்ததாக ஐதீஹம்.

(சுழலும்)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா

The post ஞானத்தின் சிகரமான அம்பிகை appeared first on Dinakaran.

Tags : Ambika ,Sudha Sakara ,
× RELATED ஞானத்தின் சிகரமான அம்பிகை