பொன்னேரி, நவ. 14: மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள்வதில் கால தாமதம் ஏற்படுவதை கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் 2வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறைமுகங்களில் இருந்து எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் என பல்வேறு சரக்குகளை கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றனர். இதனால், இந்த துறைமுகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், மேற்கண்ட 2 துறைமுகங்களிலும் சரக்குகளை கையாளும் பணியில் போதிய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மாற்றாக சரக்குகளை கையாள முறையாக தேர்ச்சி பெறாதவர்களே பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சரக்குகளை கையாள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனையடுத்து, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகளை கையாள்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி, நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், இந்த 2 துறைமுகங்களிலும் சரக்குகளை வேகமாக கையாண்டு தங்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வெண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி டிரைவர்களிடம் துறைமுக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
The post அதானி, காமராஜர் துறைமுகங்களில் 2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.