நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

கும்மிடிப்பூண்டி: மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரலுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரயிலில் இருந்த சரக்குகள் இறக்கிவைக்கப்பட்டன. பின்னர் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எண்ணூர் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்ஜின் கோளாறு ஏற்பட்டதையடுத்து பாதி வழியில் ரயில் நின்றது. பின்னர் மாற்று இன்ஜின் கொண்டுவரப்பட்டு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலானது அங்கிருந்து எண்ணூர் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் எண்ணூர் ரயில் நிலையம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கும், கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டைக்கும் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் முற்றிலுமாக தடைபட்டன. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ற புறநகர் ரயில்கள் அனைத்தும் எண்ணூர் ரயில் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் புறநகர் ரயில் சேவை தடைபட்டதால் ரயில் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். குறிப்பாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்குச் சென்ற கல்லூரி மாணவர்களும், அலுவலர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

The post நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: