இந்நிலையில் பள்ளியை திறப்பது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடயே நேற்று ஆலோசனைக் கூட்டம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் நடந்தது. இதில், மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வாசுதேவன், கேசவமூர்த்தி, சென்னை பள்ளிகல்வித்துறை மாவட்ட அலுவலர் முருகன், தாசில்தார் சகாயராணி, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, அலுவலர் புருஷோத்தம்மன், நல அலுவலர் லீனா, காவல் போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பொதுத்தேர்வு எழுத கூடிய, 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர், மாணவியர்களுக்கு இன்று முதல் (13ம் தேதி) பள்ளியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது ஒரு வார காலத்திற்கு மாநகராட்சி மருத்துவக் குழுவினர், மாசுகட்டுப்பாடு வாரியம் கொண்ட குழுவின் கண்காணிப்பில் பள்ளி வகுப்பறைகள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளை படிப்படியாக துவங்குவது குறித்து, ஆலோசிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து கோட்டாட்சியர் இப்ராஹிம் கூறுகையில், ‘‘பள்ளியில் இருந்த 35 முயல்கள் அகற்றப்பட்டு விட்டன. மின்விசிறி வசதியில்லை என பெற்றோர் கூறியுள்ளனர். எனவே, மின்விசிறி அமைக்க உத்தரவிட்டுள்ளேன். 40 பேருக்கு மேல் உள்ள வகுப்புகளில் மாணவர்கள் பிரித்துவைக்கப்படுவர். மாணவ, மாணவியர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் பள்ளி இயங்க வேண்டும். வாயு கசிவு குறித்து பல்வேறு சோதனைகள் செய்தும் இதுவரை கண்டறியப்படவில்லை’’ என்றார்.
The post வாயு கசிவு பிரச்னையால் மூடப்பட்ட திருவொற்றியூர் பள்ளி இன்று மீண்டும் திறப்பு: 35 முயல்கள் அகற்றம் appeared first on Dinakaran.