தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்தால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற மண்டலங்களைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தாழ்வான பகுதிகளில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த நீரை வெளியேற்றும் ராட்சத மின் மோட்டார்கள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகளை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வருகிறோம். தாழ்வான பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருப்பதோடு அவசியம் ஏற்படும் இடங்களில் தற்காலிக கால்வாய்களை வெட்டி மழைநீரை வெளியேற்ற பொக்லைன் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெருமழை பெய்து குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைக்க மாநகராட்சி பள்ளி, சமுதாயக்கூடம் போன்ற நிவாரண மையங்கள் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன.
மேலும் காய்ச்சல், இருமல், சளி முதியோர்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க கடந்த ஒரு மாதமாகவே தேவையான இடங்களில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பெருமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவமாகக் கொண்டு, இம்முறை பொதுமக்களுக்கு மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரிவு அதிகாரிகளும் மிகவும் கவனமாக செயல் செயல்பட்டு வருகிறோம் என்றனர்.
The post திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.